புதுக்கோட்டை: புதுக்கோட்டை சாந்தநாதபுரத்தை சேர்ந்த விக்னேஸ்வரன்(36) உட்பட 11 இளைஞர்களை போதை மாத்திரை மற்றும் ஊசி பயன்படுத்தியது தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் நேற்றுமுன்தினம் இரவு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது விக்னேஸ்வரன் இறந்தார்.
இதுதொடர்பாக புதுக்கோட்டை ஆலங்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி நேற்று விசாரணை நடத்தினார். முதலில் விக்னேஸ்வரனின் உடலை பார்வையிட்டு நீதிபதி ஆய்வு செய்தார். பின்னர் நீதிபதி முன்னிலையில் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். விக்னேஸ்வரனின் உறவினர்கள் 5 பேர், சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்திய நீதிபதி, தனித்தனியாக வாக்குமூலம் பெற்றார்.