வத்தலக்குண்டு: செல்போன் பறித்த வழக்கில் விசாரணை நடத்தி கொண்டிருந்தபோது, வாலிபர் காவல்நிலைய மாடியில் இருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்தவர் விஜயபாண்டியன் (32). இவர் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் இரவு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், விஜயபாண்டியனை மிரட்டி செல்போனை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் வத்தலக்குண்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதைதொடர்ந்து போலீசார் விஜயபாண்டியன் அடையாளம் காட்டிய தேனி மாவட்டம், தேவதானப்பட்டியை சேர்ந்த கரண்குமார் (25), பாலமுருகன் (25), பிரதீப் (26) ஆகியோரை அழைத்து வந்து விசாரணை செய்தனர். மூன்று இளைஞர்களின் பெற்றோரும் நேற்று காலை வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது கரண்குமார், பாத்ரூம் போவதாக காவல்நிலைய மாடிக்கு சென்றார். மொட்டை மாடிக்கு சென்றவர் திடீரென அங்கிருந்து காவல்நிலையத்தின் பின்புறம் கீழே குதித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு போலீசார் ஓடி வந்து பார்த்தபோது, கரண்குமார் தலையில் பலத்த காயத்துடன் கிடந்தார்.
போலீசார் உடனடியாக அவரை மீட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தகவலறிந்ததும், சம்பவம் நடந்த வத்தலக்குண்டு காவல்நிலையத்தில் எஸ்பி பாஸ்கரன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதையடுத்து, பாலமுருகன், பிரதீப் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர், வத்தலக்குண்டு காவல்நிலைய மாடியில் இருந்து குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.