காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், புத்தளி கிராமத்தை சேர்ந்தவர் நவநீதம். இவர், தனது 7 வயது மகளுக்கு அதே கிராமத்தை சேர்ந்த சங்கர் மகன் ரஞ்சித்குமார் (26). கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாலியல் தொல்லை கொடுத்ததாக, மாகறல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மைனர்சாமி வழக்குப்பதிவு செய்து, ரஞ்சித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார். பின்னர், இவ்வழக்கின் விசாரணையை முடித்து அப்போதைய காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜகோபால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.
பின்னர், இவ்வழக்கின் நீதிமன்ற விசாரணை செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை துரிதமாக நடத்தி முடிக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தற்போதைய காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேசில் பிரேம் ஆனந்த், நீதிமன்ற காவலர் லதா மற்றும் வசந்தி, செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் புவனேஷ்வரி ஆகியோர் இவ்வழக்கில் தனிக்கவனம் செலுத்தினர். இந்த வழக்கில் குற்றவாளி ரஞ்சித்குமாருக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற சிறப்பு நீதிமன்ற நீதிபதி தமிழரசி, குற்றவாளி என உறுதி செய்து 32 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.