சென்னை: கே.கே நகரில் குளிர்சாதன பெட்டி அருகே தூங்கிக் கொண்டு இருந்த இளைஞர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சென்னை கே.கே நகர் கிழக்கு வன்னியர் சாலை பகுதியில் வசித்து வந்தவர் வெங்கடேஷ் (43). இவர், வெல்டிங் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டில் உள்ள ஹாலில் குளிர்சாதனப் பெட்டியின் அருகே உறங்கிக் கொண்டிருந்தபோது, தூக்க களைப்பில் தனது கையை குளிர்சாதன பெட்டியின் மீது உரசியுள்ளார். குளிர்சாதனப்பெட்டியின் அடிப்பகுதியில் மின்கசிவு இருந்ததால், வெங்கடேஷ் அலறித் துடித்துள்ளார்.
இதையடுத்து அருகில் இருந்த அவரது மனைவி அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளார். அப்போது அவருக்கும் ஷாக் அடித்துள்ளது. ஆனால் அவர் சுதாரித்து கொண்டு தனது கணவரை மீட்டு, சுயநினைவிழந்த அவரை, அருகில் உள்ளவர்களின் உதவியுடன் இருசக்கர வாகனத்தின் மூலம் கே.கே. நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வெங்கடேஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
பின்னர் நடந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார், உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மின்கசிவு காரணமாக வெங்கடேஷ் உயிரிழந்ததாக கூறப்பட்டதால், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பொதுவாக குளிர்சாதனப்பெட்டியில் பழுது இருந்தாலோ அல்லது நீண்டநாள் பராமரிக்காமல் இருந்தாலோ, மின்வயர் துண்டிக்கப்பட்டு மின்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே குளிர்சாதனப் பெட்டி அருகே எந்தவித பாதுகாப்பு உணர்வும் இல்லாமல் தூங்குவது ஆபத்தானது என்பதை இச்சம்பவம் உணர்த்துவதாக அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.