சென்னை: தண்டையார்பேட்டை மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர் இரவு நேரத்தில் யாரையும் தூங்கவிடாமல் தொந்தரவு செய்ததால், அதே காப்பகத்தில் இருந்தவர்களால் சரமாரியாக அடித்து கொலை செய்யப்பட்டார். இது, சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனையில், ஆண்கள் மனநல காப்பகம் உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு சிகிச்சை பெற்று வந்த மகேஷ் (36) என்பவர் நேற்று முன்தினம் கழிவறை சென்றுள்ளார். அங்கு அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை காப்பக ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் (23) ஆட்டோவில் ஏற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றிய புகாரின்பேரில், புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கடந்த 2022 ஜூன் மாதம் மனநலம் பாதிக்கப்பட்ட மகேஷை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டு கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சேர்த்ததும், பின்னர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தண்டையார்பேட்டை மனநல காப்பகத்தில் அவரை சேர்த்ததும் தெரிய வந்தது.
இங்கு கடந்த சில நாட்களாக மகேஷ் இரவு நேரங்களில் யாரையும் தூங்கவிடாமல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த 6 பேர் அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில், மகேஷின் மார்பு, வலது முழங்கையில் படுகாயம் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக, மயங்கி விழுந்து உயிரிழந்ததும் தெரிய வந்தது. மனநலம் பாதித்தவர்களே கொலையாளிகளாக மாறிய சம்பவத்தால், அங்கு பணியில் உள்ளவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டனர். இதுகுறித்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.