திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை அருகே தாழக்கடையை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் வெள்ளையன் (19). திண்டுக்கல் அடுத்த தவசிமடையை சேர்ந்தவர் சவேரியார் (65). இவர் சிறுமலை தாழக்கடை வேளாண் பண்ணையில் தோட்டம் வைத்துள்ளார். இவருக்கும், வெள்ளையன் குடும்பத்திற்கும் முன்பகை இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சவேரியார் தோட்டத்தின் வழியாக நேற்று அதிகாலை 3 மணி அளவில் வெள்ளையன் நடந்து சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சவேரியார், நாட்டு துப்பாக்கியால் வெள்ளையனை சுட்டுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த வெள்ளையன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து சவேரியாரை தேடி வருகின்றனர்.