பெங்களூரு: பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சில மணி நேரம் முன்பாக பறக்கும் விமானத்தின் கதவை திறக்க முயன்ற வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த வெங்கட் மோஹித் என்ற 29 வயது வாலிபர், ஏர் பிரான்ஸ் ஏஎப்-194 விமானத்தில் பாரிஸிலிருந்து பெங்களூரு வந்தார். விமானம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு 4 மணி நேரத்திற்கு முன், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது வெங்கட் மோஹித் விமானத்தின் பின்பக்கத்தில் உள்ள கதவை திறக்க முயற்சித்திருக்கிறார். விமான ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு அவரை தடுத்து நிறுத்தினர்.
ஏர் பிரான்ஸ் இந்தியா அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் வெங்கட் மோஹித் மீது கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெங்கட் மோஹித் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். வெங்கட் மோஹித்தை கதவை திறக்கவிடாமல் ஊழியர்கள் தடுத்ததால் விமானத்தில் பயணித்த மற்ற பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.