நெல்லை: நெல்லை மேலப்பாளையத்தில் ஆன்ைலன் சென்டர் நடத்தி வந்த இளைஞரை நேற்று நள்ளிரவில், சென்டருக்குள் புகுந்து மர்மநபர்கள் வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் அமீர் அம்சா மகன் செய்யது தமீம் (31). இவர், மேலப்பாளையம் விஎஸ்டி பள்ளிவாசல் அருகே ஆன்லைன் சென்டர் நடத்தி வந்தார். பட்டா, சிட்டா நகல் தொடர்பாகவும், பத்திரப்பதிவு நகல் தொடர்பாகவும் ஆன்லைன் சேவைகளை இவர் செய்து வந்தார்.
நேற்று இரவில் வழக்கம்போல் சென்டரில் பணிகளை முடித்துவிட்டு, இரவில் வீடு திரும்பிய செய்யது தமீம், வீட்டில் உணவருந்திவிட்டு, மீண்டும் சென்டரில் சிறிய வேலை இருப்பதாக கூறிவிட்டு அங்கு சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. நள்ளிரவில் வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தால், அவரது தந்தை ஆன்லைன் சென்டருக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு கண்ணாடி கதவுகள் திறந்த நிலையில், உள்ள ரத்த வெள்ளத்தில் செய்யது தமீம் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தமீமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், வழக்கு பதிந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.