புதுடெல்லி: இந்தியாவில் 10ல் 6 டீன்ஏஜ் பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய குடும்ப சுகாதார ஆய்வுகளின் தரவுகளை பயன்படுத்தி, உத்தரப்பிரதேசத்தின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கழைக்கழகங்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில், இந்தியாவில் 10 டீன்ஏஜ் பெண்களில் 6 பேருக்கு ரத்த சோகை பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீன்ஏஜ் பருவத்தில் திருமணம் மற்றும் தாய்மை அடைதல், மோசமான ஊட்டச்சத்து மற்றும் ஏழ்மை, கல்வி போன்ற பிற சமூக பொருளாதார மாறுபாடுகள் ஆகியவையே 15 முதல் 19 வயதுடைய இந்திய பெண்களின் ரத்த சோகைக்கு முக்கிய ஆபத்து காரணிகளாக உள்ளன. மேலும், ரத்த சோகை பாதிப்பு கொண்ட மாநிலங்களின் எண்ணிக்கை 2015-16ல் 5 ஆக இருந்த நிலையில், 2019-21ல் 60 சதவீதம் அதிகரித்து 11 ஆக உயர்ந்துள்ளது. 18 வயதுக்கு முன் திருமணமான பெண்களில் ரத்த சோகையின் பாதிப்பு அதிகமாக உள்ளது.
அதே சமயம், படித்த டீன்ஏஜ் பெண்கள் ரத்த சோகைக்கு ஆளாக வாய்ப்பில்லை என கூறும் ஆய்வின் ஆசிரியர்கள், ‘‘கல்வியானது ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் பற்றிய புரிதலை தருகிறது. மேலும் படிப்பதால் நல்ல வேலைவாய்ப்புகள் கிடைத்து, கைநிறைய வருமானம் கிடைப்பதால், சுகாதாரம் மற்றும் சத்தான உணவின் சிறந்த அணுகலுக்கு வழிவகுக்கிறது’’ என்றனர். குறிப்பாக, எஸ்சி மற்றும் எஸ்டி போன்ற சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழுக்களைச் சேர்ந்த பெண்கள், மற்றவர்களை விட அதிக ரத்த சோகைக்கு ஆளாகின்றனர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.