அம்பத்தூர்: சென்னை அடுத்த மீஞ்சூரை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் காலை தனது வீட்டின் குளியல் அறையில் குளிக்க சென்ற போது அங்கு பேனாவில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவை கண்டு அதிர்ச்சியடைந்து பெற்றோரை அழைத்துள்ளார். பின்பு மீஞ்சூர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சிறுமியின் வீட்டிற்கு வந்து ரகசியமாக வைக்கப்பட்டிருந்த பேனா கேமராவை எடுத்து காவல் நிலையம் கொண்டுவந்து விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கை அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர்.
அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் ஏற்கனவே அந்த சிறுமியின் குடும்பத்தாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்த வெங்கடாசலபதி (30) என்ற நபரை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் நேற்று வெங்கடாசலபதியை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், குற்றம் சாட்டப்பட்டுள்ள வெங்கடாசலபதி அப்பகுதி பெண்கள் குளிப்பதை எட்டி பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பதாகவும், பலமுறை இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.