செங்கல்பட்டு: செங்கல்பட்டில் மயங்கிய பெண்ணுக்கு உதவுவது போல் நடித்து செல்போனை திருடிச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். சிசிடிவி கேமரா பதிவால் அவர் சிக்கினார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகள் அஷ்மிதா (22). செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் தங்கி தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவர் வாரந்தோறும் சொந்த ஊரான அரக்கோணம் சென்றுவிட்டு, மீண்டும் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருப்போரூர் செல்வது வழக்கம்.
வழக்கம்போல் கடந்த 27ம் தேதி செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் திருப்போரூர் பேருந்துக்காக அஷ்மிதா காத்திருந்தபோது திடீரென அவர் மயங்கி விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரது மகன் வைத்தியலிங்கம் (35) அருகில் நின்றிருந்தார். அவர் அஷ்மிதாவிடம், தான் ஒரு பத்திரிகையாளர் எனக் கூறியுள்ளார்.
மேலும், நானும் திருப்போரூரில்தான் வசிக்கிறேன் எனக்கூறி தனது பைக்கில் அமர வைத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அஷ்மிதாவை அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து மாத்திரை வாங்கச் சென்ற அஷ்மிதா திரும்பி வருவதற்குள், அவரது செல்போன் மற்றும் பொருட்களை வைத்தியலிங்கம் திருடிச் சென்றதால் அஷ்மிதா அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் வைத்தியலிங்கத்தை தேடினர். செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் வந்தபோது அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.