ஸ்ரீபெரும்புதூர்: ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே ரேணிகுண்டா பகுதியை சேர்ந்தவர் பாசில்கான் (20). இவர், திருவள்ளூர் மாவட்டம், கூத்தம்பாக்கம் கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி, ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2ம்தேதி பாசில்கான், தனக்கு சொந்தமான விலை உயர்ந்த உயர்ரக பைக்கில் சென்று, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் பைக்கை நிறுத்திவிட்டு, கல்லூரிக்கு சென்றுள்ளார். பின்னர், வகுப்பறை முடிந்து வெளியே வந்து பார்த்தபோது, பைக் காணாமல்போய் இருந்தது.
இதனைகண்டு, அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவன் பாசில்கான், இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தியதில், பைக்கை திருடி சென்றது கோவையை சேர்ந்த காளீஸ்வரமூர்த்தி (27) என்பதும், மார்க்கெட் பக்கத்தில் திருடப்பட்ட பைக்கினை, பேஸ்புக் செயலியில் விற்பனை என்று போட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், காளீஸ்வரமூர்த்தியை கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.