ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். ஓசூரில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர், படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் உள்ளார். அவர் பிளஸ்2 படிக்கும்போது தாய் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், தான் வாணியம்பாடியில் உள்ள ஜாப்ராபாத், சியாலி தெருவை சேர்ந்த நூருல்லா என்பவரது மகன் முகமது இர்ஷாத் என்கிற சமீர் என்றும், 20 வயது தான் ஆகிறது எனக்கூறினாராம்.
இதனை உண்மை என நம்பிய இளம்பெண் செல்போனில் அவருடன் பேசி பழகினார். இதனை சாதகமாக பயன்படுத்தி இளம்பெண்ணின் போட்டோக்களை பெற்ற சமீர் அவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறினார். ஒரு கட்டத்தில் சமீரை நேரில் பார்த்து 40 வயதுக்கு மேல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் அவரிடம் பேசுவதை தவிர்த்தாராம்.
இதனால் ஆத்திரமடைந்த சமீர் இளம்பெண்ணின் போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் இளம்பெண் பேசியபோது அவரின் நிர்வாண போட்டோக்களையும் மிரட்டி பெற்றுள்ளார். பின்னர் அந்த போட்டோவை இளம்பெண்ணின் தாய் செல்போனுக்கு அனுப்பி மிரட்டி பணம் கேட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் ரூ.15 ஆயிரம் வரை ஆன்லைனில் அனுப்பினாராம்.
இதற்கிடையில் கடந்த நவம்பர் மாதம் ஜோலார்பேட்டையில் உள்ள பாழடைந்த ரயில்வே குடியிருப்பு பகுதியில் இளம்பெண்ணை மிரட்டி சமீர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அதே மாதத்தில் ஒசூர் அடுத்த அத்திப்பள்ளி பகுதிக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதனை செல்போனில் பதிவு செய்து கடந்த 12ம் தேதி அவரது தாய், சித்தி ஆகியோரது செல்போனுக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் தாய் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் முகமது இர்ஷாத் என்ற சமீர்(41) என்பவரை நேற்று கைது செய்தனர். அவர் மீது 8 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர். சமீருக்கு திருமணம் ஆகி மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.