சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது.சென்னையில் விம்கோ நகர் – விமான நிலையம், சென்ட்ரல் – பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடங்களில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் காலை, மாலை நேரத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இதன் காரணமாக, இந்த நேரங்களில் 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், விம்கோநகர் – விமான நிலைய வழித்தடத்தில் நேற்று மதியம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால், விம்கோ நகர் – விமான நிலையம், சென்ட்ரல் – பரங்கிமலை ஆகிய இரு வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில்கள் ஆங்காங்கே தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.உடனடியாக, மெட்ரோ ரயில் பொறியாளர்கள் விரைந்து வந்து, தொழில்நுட்ப கோளாறை சரி செய்தனர். இதையடுத்து, 40 நிமிடங்களுக்கு பிறகு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.