சென்னை: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான பாடம் வாரியான தேர்வு இன்று தொடங்குகிறது. 118 இடங்களுக்கு 13,143 பேர் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் (நேர்முக தேர்வு பதவிகள்) அடங்கிய சட்டக் கல்லூரிகளில் விளையாட்டுக் கல்வி இயக்குநர் முதுநிலை அலுவலர் உள்பட 20 துறைகளில் காலியாகவுள்ள 118 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை கடந்த மே 15ம் தேதி வெளியிட்டது. இதை தொடர்ந்து, தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 14ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது.
இந்த தேர்வுக்கு 13,143 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 3 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 13,140 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இவர்களுக்கான பாடவாரியான தேர்வுகள் இன்று 12ம் முதல் 16ம் தேதி வரை (ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் நீங்கலாக) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 48 இடங்களில் நடக்கிறது. சென்னையில் இன்று 11 மையங்களில் நடக்கிறது. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான முதல்நிலை தேர்வு கடந்த 28ம் தேதி நடந்தது குறிப்பிடத்தக்கது.