சென்னை: குவைத்தில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் இரவு 11.26 மணிக்கு 154 பயணிகள், 8 விமான ஊழியர்களுடன் சென்னைக்கு புறப்பட்டது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, திடீரென விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானி, விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்து, குவைத் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, மீண்டும் குவைத் விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கினார்.
விமான பொறியாளர் குழுவினர், தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய முடியாததால் அந்த விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் குவைத் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனிடையே விமானம் தொழில்நுட்ப கோளாறு சீர் செய்யப்பட்டு, தாமதமாக சென்னைக்கு புறப்பட்டு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை விமானி உடனடியாக கண்டுபிடித்து, குவைத் விமான நிலையத்திலேயே அவசரமாக தரையிறக்க செய்ததால் விமானம் ஆபத்திலிருந்து தப்பியதோடு, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.


