மாகோ: லடாக் முதல் அருணாச்சல பிரதேசம் வரையிலும் சீன எல்லையில் உளவு தகவல்களை சேகரிக்கவும், கண்காணிக்கவும் உளவுத்துறை அதிகாரிகள் கொண்ட புதிய குழுவை நியமிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. கிழக்கு லடாக்கில் கல்வான் மோலைத் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாகவே இந்தியா, சீனா இடையே எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி அருணாச்சல பிரதேசத்தில் உள்ள யாங்ஸ்டேயில் பகுதியில் சீன துருப்புகள் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததால், இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் இருதரப்பு வீரர்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.
இதுபோல, இந்தியா, சீனா எல்லை வரையறுக்கப்படாததால், அடிக்கடி சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவும் சம்பவங்கள் நடக்கின்றன. அதே சமயம், இந்திய எல்லையை ஒட்டி சீனா தனது பகுதியில் பல்வேறு கட்டமைப்புகளை பலப்படுத்தி வருகிறது. இந்நிலையில், எல்லைக்கு அப்பால் உளவுத் தகவல்களை அறியவும், சீன எல்லையை ரகசியமாக கண்காணிக்கவும், புதிய உளவுப் பிரிவை சேர்க்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எல்லை உளவு பிரிவு (பிஐபி) எனப்படும் இந்த உளவு அணி, சீனாவை ஒட்டிய இந்திய எல்லையை பாதுகாக்கும் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையின் ஒரு அங்கமாக செயல்படும்.
இந்த புதிய அணியில் 4 அல்லது 5 உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் இடம் பெற்றிருப்பார்கள். இவர்கள் எல்லைக்கு அப்பால் நடக்கும் விஷயங்களை ரகசியமாக அறிந்து அவற்றை ஒன்றிய அரசுடன் பகிர்ந்து கொள்வார்கள் என ராணுவ உயர்மட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இந்திய, சீன எல்லை முழுவதும் 180 எல்லைப் புறக்காவல் நிலையங்களை இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை அமைத்துள்ளது. மேலும் 45 புறக்காவல் மையங்களை அமைக்க ஒன்றிய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.