சென்னை: ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கு 53 வயது என்றும் இதர பிரிவினருக்கு 58 வயது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில்;
1. அரசாணை (நிலை) எண்.12, பள்ளிக் கல்வி (தொ.க.1(1))த் துறை, நாள் 30.01.2020
2. அரசாணை (நிலை) எண்.13, பள்ளிக் கல்வி(பக3(1))த் துறை. நாள் 30.01.2020
3.அரசாணை (நிலை) எண்.14, பள்ளிக் கல்வி(பக2(1))த் துறை. நாள் 30.01.2020
4. அரசாணை (நிலை) எண்.144, பள்ளிக் கல்வி(பக2(1))த் துறை, நாள் 18.10.2021
5. அரசாணை (நிலை) எண்.91, மனிதவள மேலாண்மை(எஸ்)த் துறை, நாள் 13.09.2021
6. அரசாணை (நிலை) எண்:146, பள்ளிக் கல்வி (வ.செ.1)த் துறை, BITOT 22.08.2023
7. பள்ளிக் கல்வி துறை அமைச்சர் 04.10.2023 அன்று வெளியிட்ட அறிவிப்பு
8. பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்.75832/சி2/இ2/ 2017, 18.10.2023.
மேலே ஒன்று முதல் மூன்று வரையில் படிக்கப்பட்ட அரசாணைகளில் முறையே தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள், தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகளை மறுவெளியீடு செய்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவ்வரசாணைகளில் வெளியிடப்பட்ட சிறப்பு விதிகளில் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் உள்ள பள்ளிகளில், ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40 வயது என்றும், இதர பிரிவினர்களுக்கு 45 வயது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், மேற்கண்ட சிறப்பு விதிகளில் முறையே வயது வரம்பிற்கான விதி எண்.6(a), 5(a) மற்றும் 6ல் நிர்ணயிக்கப்பட்டுள்ள, ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக உச்ச வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 40-லிருந்து 45-ஆகவும், இதரப் பிரிவினருக்கு 45-லிருந்து 50-ஆகவும் சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் உயர்த்தியும், இந்த உச்ச வயது வரம்பு 31.12.2022 வரை வெளியிடப்படும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கைகளுக்கு பொருந்தும் எனவும், மேலே ஐந்தாவதாகப் படிக்கப்பட்ட மனிதவள மேலாண்மை(எஸ்)த் துறையின் அரசாணையின்படி ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பினை, 01.01.2023 முதல் பொதுப் பிரிவினருக்கு 42 ஆகவும், இதர பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயம் செய்தும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலே ஆறாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், பள்ளிக் கல்வித் துறையின் கீழுள்ள ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு சார்ந்து மேலே ஒன்று மற்றும் இரண்டில் படிக்கப்பட்ட அரசாணைகளில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகள் மற்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள வயது வரம்பு சார்பான விதிகள் முறையே, 6(a) மற்றும் 5 இல் நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்ச வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 45 எனவும், இதர பிரிவினருக்கு 50 எனவும் ஒரு சிறப்பு நிகழ்வாக கருதி ஒருமுறை மட்டும் உயர்த்தியும், இவ்வாறு உயர்த்தப்படும் உச்ச வயது வரம்பானது தற்போது மேற்கொள்ளப்பட உள்ள இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக வெளியிடப்படும் அறிவிக்கைக்கு மட்டுமே பொருந்தும் எனவும், இப்பணி நியமனத்திற்கு பிறகு ஆசிரியர் நியமனத்திற்கான உச்ச வயது வரம்பானது திரும்பவும் இதற்கு முன்பு இருந்த நிலையிலேயே தொடரும் எனவும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலே ஏழாவதாகப் படிக்கப்பட்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் 04.10.2023 அன்று வெளியிட்ட அறிவிப்பில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் பல்வேறு ஆசிரியர் சங்க அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்ததைத் தொடர்ந்து பின்வருமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வரிசை எண்.3 : TET தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பணிநாடுநர்கள்:
TET தேர்வில் தேர்ச்சிப்பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் பணி நாடுநர்களுக்கு, உச்ச வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 53-ம், இதர பிரிவினருக்கு 58-ம் ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. மேலும் பல்வேறு வழக்குகள் ஆசிரியர் தெரிவு சார்ந்து மாண்பமை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.
மேலே எட்டாவதாகப் படிக்கப்பட்ட பள்ளிக் கல்வி இயக்குநரின் கடிதத்தில், மேலே ஒன்று முதல் மூன்று வரையில் படிக்கப்பட்ட அரசாணைகளின்படி அரசிதழ் எண்.36, நாள் 30.01.2020இல் வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள், தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள அனைத்து வகையான ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு விதிகள் முறையே விதி எண்.6(a), விதி எண்.5 மற்றும் விதி எண்.6இல் தெரிவிக்கப்பட்டுள்ள உச்ச வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 53 ஆகவும், இதர பிரிவினருக்கு 58 ஆகவும் நிர்ணயித்து உரிய அரசாணை வழங்குமாறு அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் 04.10.2023 நாளிட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை கவனமுடன் ஆய்வு செய்து, மேலே ஆறாவதாகப் படிக்கப்பட்ட அரசாணைக்கு பதிலீற்றாக, பள்ளிக் கல்வித் துறையின் கீழுள்ள ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு சார்ந்து, மேலே ஒன்று முதல் மூன்று வரையில் படிக்கப்பட்ட அரசாணைகளில் மறுவெளியீடு செய்து வெளியிடப்பட்ட முறையே தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள், தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணிளுக்கான சிறப்பு விதிகள் ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள அனைத்து வகையான ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு விதிகள் முறையே விதி எண்.6(a), விதி எண்.5 மற்றும் விதி எண்.6இல் தெரிவிக்கப்பட்டுள்ள உச்ச வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயித்து ஆணை வெளியிடலாம் என முடிவு செய்து, அவ்வாறே அரசு ஆணையிடுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.