கல்வியில் கற்பித்தல் திறன் என்பது கடினமான மற்றும் மென்மையான திறன்களின் கலவையாகும். கற்றலில் மாணவர்களைத் திறம்பட ஈடுபடுத்துவதற்கும் வகுப்பறையில் நேர்மறையான சூழலை உருவாக்குவதற்கும் கற்பித்தல் திறன் மிகவும் அவசியம். இந்த திறன் அன்றாட பணிகளை நிர்வகிப்பது மட்டுமல்ல மாணவர்கள் தங்கள் அதிகபட்ச திறனை கற்கக்கூடிய சூழலை வளர்ப்பதற்கான அடித்தளம் ஆகும்.ஆசிரியர்கள் பாடத் தலைப்பில் புலமை, பாடம் தொடர்புடைய கருத்துகள் மற்றும் அது தொடர்பான அண்மைச் செய்திகளை அறிந்திருத்தல் அவசியம். வகுப்பறை சூழ்நிலை, மாணவர்கள் மனநிலை இவையெல்லாம் ஆசிரியரின் திறமையை நிர்ணயிக்கிறது என்றாலும், ஆசிரியரின் ஆளுமைத்திறன் மட்டுமே பெரும் பங்கு வகிக்கிறது.
கற்பித்தலில் சற்று வித்தியாசமான அணுகுமுறையும், புதுமைகளை புகுத்துதலும் நாளும் மாறுப்பட்ட புதிய யுத்திகளை பயன்படுத்துதல் நல்ல பலனைத் தரும்.
உதாரணமாக ஒருசிலர் வகுப்பு தொடக்கத்தில் மாணவர்கள் மனநிலையை ஒருநிலைப்படுத்த ஒரு நிமிட தியானம் செய்யச் சொல்வதுண்டு. பாடக் கருத்துகளைத் தொடர்புடைய நகைச்சுவைத் துணுக்குகளோடு இணைத்து கற்பித்தல் நல்ல பயனைத் தரும். மாணவர்கள் பாடங்களை நினைவில் வைத்துக் கொள்ள உதவும்.அதேபோலப் பாடம் எடுக்கும்போது மாணவர்களைக் கட்டாயம் குறிப்பு எடுக்க வைப்பது இரட்டிப்புப் பலனைத் தரும். இதன் மூலம் கவனச்சிதறல் இருக்காது.
பாடச் செய்திகளைக் குறிப்பெடுக்கும்போது பாடத் தலைப்பை ஒரு முறை படிக்கும் நிலை ஏற்படுவதோடு சந்தேகங்கள் உடனுக்குடன் களைய வாய்ப்பை ஏற்படுத்தும். ஆசிரியர்கள் ஒரே இடத்தில் இருந்துகொண்டு பாடம் எடுக்காமல் வகுப்பறை முழுவதும் கடைசி வரைச் சென்று அவ்வப்போது கண்காணித்தல் பின் இருக்கை மாணவர்களையும் பாடங்களில் கவனம் செலுத்த வைக்கும். மாணவர்களைக் கரும் பலகையில் பாடத் தலைப்பின் கருத்துச் சுருக்கம் எழுதச் செய்தல் போன்றவை நல்ல பலனைத் தரும். பாடத் தலைப்பை ஒட்டிய ஒருசில மாணவர்களின் சந்தேகத்தைப் பாடத்தை நன்கு அறிந்த மாணவர்களைக் கொண்டு விளக்க முயற்சிப்பது பயன் தரும். தேவையானால் இடை இடையே ஆசிரியர் திருத்தங்கள் செய்தல், கூடுதல் விவரங்கள் தருதல், பதில்களை நெறிப்படுத்துதல் நல்ல பலன் கொடுக்கும்.
மாணவர்கள் பல்வேறு கற்றல் பாணிகள் மற்றும் வேகங்களைக் கொண்டுள்ளனர். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, நீங்கள் வேறுபட்ட திறன்களை அந்தந்த மாணவர்களுக்கு ஏற்ப மாற்ற வேண்டும். ஆசிரியர்களில் பலருக்கு, மாணவர்களுடன் தொடர்புகொள்ளும் திறன் போன்ற சில கற்பித்தல் திறன்கள் இயல்பாகவே வரலாம். ஒருசிலருக்கு அத்தகைய திறன்களைப் பெறுவதற்குப் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் தேவைப்படலாம்.இன்றைய சமூகத்தின் டிஜிட்டல் தன்மை காரணமாகக் கல்வி அமைப்புகளில் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு முக்கியமானது. ஒரு ஆசிரியராக, நீங்கள் சமீபத்திய கல்வித் தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகள் பயன்பாட்டில் உங்கள் திறனை நீங்கள் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
தொழில்நுட்பம் இப்போது கற்றலில் எவ்வாறு ஊடுருவியுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். பாடம் திட்டமிடல், பணி வழங்குதல் மற்றும் தரப்படுத்தல் முதல் மாணவர்களின் செயல்திறன் மற்றும் நடத்தையைப் பகுப்பாய்வு செய்வது வரை, வகுப்பறையில் தொழில்நுட்பம் இன்றியமையாததாகிவிட்டது. எனவே, கல்வித் தொழில்நுட்பத்தில் உங்கள் திறமைகளை மேம்படுத்தும்போது, ஆசிரியராக உங்கள் திறனை அதிகரிக்கிறீர்கள். இதன் மூலம் மாணவர்களின் கற்றலில் தாக்கம் கணிசமாக அதிகரிக்கிறது. மேலும், உங்கள் தொழில்நுட்பத் திறன்களைச் செம்மைப்படுத்துவது உங்கள் கற்பித்தல் சுயவிவரத்திற்கு குறிப்பிடத்தக்க மதிப்பைச் சேர்க்கிறது. நவீன வகுப்பறைகளுக்கான உங்கள் தயார்நிலையை நிரூபிக்கிறது. இதன் விளைவாக அனைத்து மாணவர்களின் கற்றல் திறனும் மெருகேறும் சூழலை நீங்கள் வளர்க்க முடியும்.
முத்து