மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே மணமை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 6 முதல் 12ம் வகுப்பு வரை 300 மாணவ – மாணவிகளுக்கு 2 ஆசிரியர்கள் மட்டுமே பாடம் நடத்தும் அவலநிலை காணப்படுகிறது. இதனால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படுகிறது.
மாமல்லபுரம் அடுத்த மணமை கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, மணமை, கீழக்கழனி, தர்காஸ், மலைமேடு, லிங்கமேடு, குன்னத்தூர், கடம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 1 முதல் 12ம் வகுப்பு வரை 300க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில், கடந்த 2014ம் ஆண்டு முதல் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தலைமை ஆசிரியர் உட்பட 15 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது வரை தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் இல்லாமல், 2 ஆசிரியர்கள் மட்டுமே பணி செய்து வருகின்றனர். இதில், தலைமை ஆசிரியர் மாலதி என்பவர் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி பணி ஓய்வு பெற்றநிலையில், இதுவரை எந்த ஆசிரியரும் நியமிக்கப்படாமல் தற்போது வரை 2 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இங்கு, இரவு காவலர், அலுவலக பணியாளர்கள், எழுத்தர், துப்புரவு பணியாளர் என ஒரு பணியிடம் கூட கடந்த 2014ம் ஆண்டு முதல் நியமிக்கப்படவில்லை.
இப்பள்ளியில், கணினி இயக்குபவர் இல்லாததால் ஏற்கனவே உள்ள 2 ஆசிரியர்கள் கூடுதல் சுமையுடன் அலுவலக பணிகளையும், மாணவர்கள் பற்றி தகவல்களை கணினியில் பதிவேற்றவும், பள்ளிக்கு இ-மெயில் மூலம் வரும் தகவல்களை சேகரிக்கும் பணிகளையும் மன வேதனையுடன் கவனித்து வருகின்றனர். வகுப்பறைகளில், பாடம் நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவ – மாணவிகள் தினமும் பள்ளிக்கு வந்து 4 சுவர்களுக்குள் அடைபட்டு கிடக்கிறார்கள். அந்தந்த, வகுப்பு நேரங்களில் வெறும் புத்தகத்தை வைத்து படித்தாலும் கூட, பாடம் சம்பந்தமாக சந்தேகம் கேட்க கூட ஆசிரியர் துணை இல்லை.
ஒரு சில, மாணவர்கள் தங்கள் வகுப்புக்கு ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் புத்தகப்பையும் எடுத்து வருவதில்லை. சில மாணவர்களை மாணவர்களின் பெற்றோர் வற்புறுத்தியும், திட்டியும் பள்ளிக்கு அனுப்பி வைப்பதாக கூறப்படுகிறது. இதனால், மாணவர்கள் ஏதோ சுற்றுலா தலத்திற்கு காலை வந்து மாலை வீட்டிற்கு செல்வது போல், ஜாலியாக வந்து செல்கின்றனர். மேலும், ஒரு சில மாணவர்கள் தங்களது சொந்த விடா முயற்சியால் படித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று கல்லூரிக்கு செல்கின்றனர்.
இங்கு, இருக்கும் 2 ஆசிரியர்களால் 6 முதல் 12ம் வகுப்பு வரை பாடம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால், பள்ளி மாணவர்களின் பெற்றோர் பல முறை ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு கொடுத்தும், தொலைபேசி மூலம் புகார் தெரிவித்தும், இப்பள்ளியில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில், நிரப்ப வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை ஆசிரியர்களை நியமிக்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படுவதோடு, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் வேறு பள்ளிகளை தேடி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
உள்ளூரில், பள்ளியை வைத்துக்கொண்டு கடந்த 2 ஆண்டுகளில், 5 கிமீ தூரம் உள்ள மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, 5 கிமீ தூரம் உள்ள வெங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, 13 கிமீ தூரம் உள்ள திருக்கழுக்குன்றம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 100க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் சேர்ந்து படித்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, பெற்றோர் – ஆசிரியர் கழகம் மூலமும், தனியார் கல்லூரி நிர்வாகங்கள் மூலம் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமித்தும், அவர்களும் மூலம் பாடம் நடத்தினாலும், அது எங்களுக்கு புரியும் படி இல்லையென மாணவர்கள் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.
ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளி என்பதால், அதிகாரிகள் சிலர் ஒருதலை பட்சமாக பார்த்து அலட்சியப்படுத்தி வருவதாகவும், தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்ய முன் வந்தாலும், போய் சேராமல் அதிகாரிகள் சிலர் தடுத்து ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வண்ணம் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘மாமல்லபுரம் அடுத்த மணமை கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. 2014ம் ஆண்டு வரை குறைந்தது, 15 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 2 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். 2014ம் ஆண்டுக்கு பிறகு இப்பள்ளியில், எந்த ஆசிரியரும் நியமிக்கப்பட்டதாக இது வரை எங்களுக்கு தெரியவில்லை.
ஆசிரியர்கள் இல்லாமலே மாணவர்கள் தாங்கள் சுயமாக படித்து அரசு தேர்வுகளில் தேர்ச்சி பெறுகின்றனர். போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் தேர்ச்சி குறைந்ததோடு, மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையும் ஆண்டுதோறும் வெகுவாக குறைந்து வருகிறது. இந்த, பள்ளி கிராமப்புறத்தில் உள்ளதால், ஆசிரியர்களுக்கான ஈட்டுப்படி இல்லாததால் ஆசிரியர்கள் வரத் தயங்குவதாக ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் வெளிப்படையாகவே கூறுகின்றனர். இந்த பள்ளிக்கு, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என அடிமட்டத்தில் உள்ள அதிகாரிகள் முதல் மேல்மட்டத்தில் உள்ள அதிகாரிகளை சந்தித்து பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த அதிகாரியும் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வில்லை.
ஏனென்றால், இது ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி தானே யார் நம்மலை கேள்வி கேட்க போகிறார்கள் என அலட்சியமாக செயல்படுகின்றனர். அங்கு, ஆள் இல்லாத ஏடிஎம் வங்கி போல் மாணவர்களும், பள்ளி கட்டிடமும் தான் உள்ளது. இதனால், பெற்றோர் தங்களது பிள்ளைகளை சேர்க்க மறுத்து, வேறு பள்ளிகளுக்கு சென்று தலைமை ஆசிரியர்களின் கால்களில் விழாத குறையாக கெஞ்சி பிள்ளைகளை அங்கு சேர்த்து விடுகின்றனர். இது சம்பந்தமாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, நீதிமன்றத்தில் ஆஜரான ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் விரைவில் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
ஆனால், அந்த உறுதி காற்றோடு, காற்றாக பறந்து விட்டது. ஆனாலும், பல ஆண்டுகளை கடந்தும் இங்கு இன்னும் ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் எடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர். கடந்த, 10 ஆண்டுகளாக இப்பள்ளியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் குடிநீர், கழிப்பறை மற்றும் மின்சார வசதி, மாணவர்கள் அமருவதற்கு டேபிள், பென்ச், விளையாட்டு உபகரணங்கள் என எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. துறை சார்ந்த எந்த அதிகாரியும் இங்கு எந்தவொரு ஆய்வு பணியும் மேற்கொள்ளவில்லை.
இப்பள்ளியை, ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் முற்றிலும் கண்டுகொள்ளாமல் விட்டதால், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், பெற்றோர் – ஆசிரியர் கழகம் மற்றும் மணமை ஊராட்சி நிர்வாகம் அதிரடியாக களமிறங்கி, அருகில் உள்ள சென்னை அணு மின் நிலையம், தனியார் கல்லூரிகள், தனியார் கம்பெனிகள் மற்றும் ஓட்டல்களுக்கு நேரில் சென்று உதவி கேட்டு, சில ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் நடத்தும் பாடங்கள் மாணவர்களுக்கும் புரியும்படி இல்லை என கூறப்படுகிறது. இதனால், காலை முதல் மாலை வரை 4 சுவர்களுக்குள் அடைபட்டுள்ள மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு மனநோயாளிகள் போல் சுற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதேநிலை, தொடர்ந்தால் பள்ளி இழுத்து மூடப்பட்டு, பள்ளி இயங்கியதற்கான அடையாளமே இல்லாமல் போய்விடும். எனவே, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரடியாக களமிறங்கி, மணமை அரசு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மன அழுத்தத்தில் இருந்து விடுபட மனநல மருத்துவர்கள் குழுவை அமைத்து கவுன்சிலிங் கொடுத்தும், பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியும், தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட போதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
* தலைமை ஆசிரியர் இல்லை
தமிழ் நாட்டில் 19 மாதங்களாக தலைமை ஆசிரியர் இல்லாமல் இயங்கும் ஒரே அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் எத்தனையோ அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் இயங்கி வருகிறது. அங்கு, போதிய ஆசிரியர்கள் நியமிக்கமிக்கப்பட்டு, மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. ஆனால், மாமல்லபுரம் அடுத்த மணமை கிராமத்தில் 19 மாதங்களாக தலைமை ஆசிரியர் இல்லாமலும், 3 மாதங்களாக உதவி தலைமை ஆசிரியர் இல்லாமலும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. எனவே, தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
* முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு
மணமை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிக்கு ஆசிரியர்களை நியமிக்க கோரி மாவட்ட கலெக்டர், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர், ஆதிதிராவிடர் நலத்துறை உயரதிகாரிகளுக்கு பல கோரிக்கை விடுத்தும், நேரில் சென்று மனு அளித்தும் ஆசிரியர்களை நியமிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால், முதலமைச்சரின் தனி பிரிவுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
* பொதுமக்கள் வலியுறுத்தல்
300 மாணவர்களுக்கு 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருக்க வேண்டிய சூழலில், தற்போது 2 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இதனால், ஆசிரியர்கள் பாடம் நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுனர். இதனால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. அது மட்டுமின்றி, ஆசியர்கள் இல்லாததால் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர்.எத்தனையோ, அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் தமிழ்நாடு அரசு, இந்த பள்ளிக்கும் போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
* உடற்கல்வி ஆசிரியர் இல்லை
பள்ளி ஆரம்பிக்கப்பட்ட முதல் நாள் வரை உடற்கல்வி ஆசிரியர் இல்லை. அதனால், மாணவர்கள் விளையாட அரசு சார்பில் இருந்து எந்த உபகரணங்களும் வழங்கப்படவில்லை. இதனால், எந்த போட்டியிலும் மாவர்கள் பங்கேற்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.