உத்திரமேரூர்: உத்திரமேரூர் வட்டார கல்வி அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், வட்டார தலைவர் கொன்ராட்மேரி தலைமை தாங்கினார். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தொடக்க கல்வி மாணவர்களின் கல்வி தரத்தினை பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். தொடக்க கல்வி மாணவர்களுக்கான இணையவழி ஆன்லைன் தேர்வுகளை கைவிட வேண்டும்.
இணையதளத்தில் தேவையற்ற பதிவுகளை மேற்கொள்ள ஆசிரியர்களை நிர்பந்திக்க கூடாது. காலை உணவு திட்டத்தினை 6, 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்திட வேண்டும். காலை உணவு திட்ட பணியிலிருந்து தலைமை ஆசிரியர்களையும், ஆசிரியர்களையும் விடுவித்து, அத்திட்டத்தை சார்ந்த சத்துணவு ஊழியர்களிடம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது. இதில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.