சென்னை: பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பொது மாறுதல் கவுன்சலிங் ஜூலை 1ம் தேதி தொடங்க உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:நடப்பு 2025-26ம் கல்வி ஆண்டுக்கான அனைத்து வகை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கவுன்சலிங் நடத்துவது தொடர்பாக 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக பொதுமாறுதல் கவுன்சலிங் அட்டவணை தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி,
* பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் கோரும் விண்ணப்பங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 26 மற்றும் 27ம் தேதிகளில் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல், முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதாவது இருந்தால் 28ம் தேதி தெரிவிக்க வேண்டும். மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் 30ம் தேதி வெளியிடப்படும். அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்துக்குள்) ஜூலை 1ம் தேதி நடக்கும்.
* அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கவுன்சலிங் ஜூலை 2ம் தேதி நடக்கும். அரசு மற்றும் நகராட்சி முதுநிலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் நிலை -01, உடற்கல்வி இயக்குநர் நிலை 1, தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாறுதல் கவுன்சலிங் வருவாய் மாவட்டத்துக்குள் 3ம் தேதி நடக்கும்.முதுநிலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் நிலை-1, உடற்கல்வி இயக்குநர் நிலை 1, தொழில் கல்வி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடக்கும்.