ஜோதிட ரகசியங்கள்
சென்ற இதழில் தொழிலுக்கு அதாவது ஜீவனத்திற்கு பாவகங்களும் கிரக காரகங்களும் எப்படி இணைய வேண்டும் என்று சில விதிகளைப் பார்த்தோம். குறிப்பாக, ஆசிரியராக உத்தியோகம் செய்வதற்கு எப்படி கிரக நிலைகள் இருக்க வேண்டும் என்பதை சில அசல் ஜாதகங்களுடன் பார்த்தால் விளங்கும் என்பதைச் சொல்லி இருந்தோம். அப்படி சில ஜாதகங்களில் பலன்களைப் பார்ப்போம். ஆசிரியர் தொழில் செய்ய, ஒருவரின் ஜாதகத்தில் புதன், (புதிய) குரு, (உபதேசம்) செவ்வாய் (வாக்கு) ஆகிய கிரகங்கள் ஆசிரியர் தொழில்காரக கிரகங்களாகக் கருதப்படுகின்றன. 10ம் வீடு (தொழில் ஸ்தானம்) குரு, புதன் அல்லது செவ்வாயுடன் தொடர்பு பெற்றிருந்தால், ஆசிரியர் தொழில் செய்யும் யோகம் கிடைக்கும். புதன், கல்வி, அறிவு, பேச்சு, எழுத்து ஆகியவற்றுக்குக் காரகனாவர். புதன் பலமாக இருந்தால், ஒருவருக்கு நல்ல கல்வி அறிவு இருக்கும். புதன் லக்னத்தில் இருந்து 4, 9ம் அதிபதிகளுடன் தொடர்பு பெற்றிருந்தால், பட்டப் படிப்பை முடித்து ஆசிரியர் தொழிலுக்கு வருவதற்கு வாய்ப்பு அதிகம். குரு, கல்வி, ஞானம், தெய்வீகமானவை ஆகியவற்றின் காரகனாவர். குருவின் அருள் இருந்தால், ஆசிரியர் தொழிலில் வெற்றி கிடைக்கும். செவ்வாய், தைரியம், உழைப்பு, செயல் திறன் ஆகியவற்றின் காரகனாவர். செவ்வாய் பலமாக இருந்தால், ஒருவருக்கு உழைக்கும் திறன் இருக்கும். செவ்வாய் புதனுடன் சேர்ந்து இருந்தால், உடற்கல்வி ஆசிரியர் ஆகலாம். 6ம் வீடு தொழில், வேலை ஆகியவற்றைக் குறிக்கும். 10ம் வீட்டில் குரு, புதன், செவ்வாய் அல்லது இவற்றோடு தொடர்பு பெற்ற கிரகங்கள் இருந்தால், ஆசிரியர் தொழில் கிடைக்கும்.
2ம் வீடு, பேச்சு, அறிவு, பாடம் சொல்லும் திறனை குறிக்கும். 2ம் வீடு பலமாக இருந்தால், நல்ல ஆசிரியராக இருக்க முடியும்.
1. குரு, புதன், ராசி லக்னத்திற்கு இரண்டு, பத்தாம் இடங்களோடு தொடர்பு பெறுவது.
2. 10ம் வீடுகள் குரு புதனின் வீடுகளாக அமைவது.
3. ஆசிரியருக்கு வாக்கு வன்மை அதிகமாக தேவை என்பதால், இரண்டாம் இடம் வலிமையாக இருத்தல் வேண்டும்.
4. குருவின் தனுசு அல்லது மீன வீடு வலிமையாக இருக்க வேண்டும்.
5. சூரியன் வலிமையாக 10ம் இடத்தோடு தொடர்பு கொண்டிருப்பின் அரசு ஆசிரியர்.
பிறந்த ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்திற்கும், குருவிற்கும், இரண்டாம் அதிபதிக்கும் ஏதாவது ஒரு வகையில் சம்பந்தம் ஏற்பட்டால்தான் ஆசிரியராக பணிபுரிய முடியும். இல்லை யென்றால் படித்த படிப்புக்கும், பார்க்கும் வேலைக்கும் சம்பந்தம் இருக்காது. செவ்வாய் அல்லது சந்திரன் புதனுடன் சேர்க்கை பெற்றால், கம்ப்யூட்டர் ஆசிரியராக பணிபுரியலாம். இரண்டாம் அதிபதி பலமாக இருந்து குரு ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம், வர்கோத்தமம் அடைந்தால் தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர் என வர முடியும்.பிறந்த ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் புதன் பலமாக இருந்தால் கம்ப்யூட்டர், கணக்கு ஆசிரியர் ஆகலாம். இந்த விதிகளை சில அசல் ஜாதகங்கள் இணைத்து பார்த்தால், நமக்கு எளிதாக விளங்கும். முதல் ஜாதகம். 36 ஆண்டுகாலம் ஒரு கல்லூரியில் பணிபுரிந்த ஒரு நண்பரின் ஜாதகம். மேஷ லக்கினம். இரண்டில் செவ்வாய்.
1. குரு விருச்சிகத்தில் கேட்டை நட்சத்திரத்தில் இருக்கிறது. ஐந்தாம் பார்வையாக குரு புதனைப் பார்க்கிறது. இப்பொழுது குருவுக்கும் புதனுக்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டது.
2. சனி அமர்ந்த நட்சத்திரம் மூலம். சனி அமர்ந்த வீடு தனுசு. குருவின் வீட்டில் சனி அமர்ந்ததால். குரு ஐந்தாம் பார்வையாக சனி அமர்ந்த நட்சத்திராதிபதி கேதுவைப் பார்த்ததால், சனி குரு இணைப்பு ஏற்பட்டுவிட்டது.
3. ஜீவனஸ்தானம் பத்தாம் இடம். பத்தாம் இடத்துக்குரிய சனி பாக்கிய ஸ்தானத்தில் குருவின் வீட்டில் அமர்ந்திருக்கிறார். சந்திரன் 10ல் அவிட்ட நட்சத்திரம். செவ்வாய் நட்சத்திரம். செவ்வாய்க்கும் குருவுக்கும் ஏழாம் பார்வை தொடர்பு ஏற்படுகிறது. எனவே ஜீவன ஸ்தானமான சனிக்குரிய வீட்டிற்கும் குருவுக்கும் தொடர்பு ஏற்படுகிறது.
4. இரண்டில் வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய். செவ்வாய்க்கும் குருவுக்கும் ஏழாம் பார்வை தொடர்பு. இத்தனையும் பொருந்தி வருவதால், இவர் முதல் இரண்டு மூன்று ஆண்டுகள் வேறு வேலை பார்த்தாலும் கல்லூரி ஆசிரியர் பணிக்கு வந்துவிட்டார். இதைவிட மிக முக்கியம், களத்திர ஸ்தானாதிபதி சுக்கிரன் புதனோடு சம்பந்தப்பட்டு, சனி அமர்ந்த நட்சத்திராதிபதி கேது குருவின் பார்வையைப் பெறுவதாலும், குருவின் வீட்டில் அமர்ந்தாலும், இவருடைய மனைவியும் ஆசிரியராக வேலை பார்த்தார்.
இனி இரண்டாம் ஜாதகம்
இவரும் எனது நண்பர். கல்லூரி ஆசிரியர் பணி செய்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர். இவர் ஜாதகத்தில் பத்தாம் வீடு கடகம். கடகத்தின் அதிபதி சந்திரன் குரு சாரம் (விசாகம் நட்சத்திரம்) பெற்று லக்னத்தில் அமர்ந்து இருக்கிறார். குரு சனி தனுசு ராசியில் இணைகிறார்கள். பாக்கியஸ்தானத்தில் அமர்ந்த செவ்வாயோடு குரு சனிக்கு ஏழாம் பார்வை இருக்கிறது. செவ்வாய் அமர்ந்த வீடு புதன். அந்த புதனும் பத்தாம் இடத்து சந்திரனோடு சேர்ந்து லக்னத்தில் அமர்ந்து இருக்கிறார். எனவே 10-ஆம் இடம் சனி குரு புதன் செவ்வாய் தொடர்பு ஏற்பட்டு விடுகிறது.
மூன்றாவது ஜாதகம்
விருச்சிக லக்கினம். குரு செவ்வாய் பார்வை இணைப்பு. குரு பத்தாம் இடத்தோடு பார்வை தொடர்பு. பத்தாம் இடத்து அதிபதி சூரியன் புதனோடு லாபஸ்தானத்தில் தொடர்பு. பத்தாம் இடத்து சூரியனை சனி மூன்றாம் பார்வையாகப் பார்க்கிறார். குருவை பத்தாம் பார்வையாகப் பார்க்கிறார். சூரியனும் புதனும் இணைந்து இருக்கின்றார்கள். எனவே அரசு உதவிபெறும் பள்ளியில் வெகுகாலம் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்று பலகாலம் ஓய்வு ஊதியமும் வாங்கினார். சந்திரன் சூரியனுக்குரிய உத்திர நட்சத்திரத்தில் இருக்கிறார். சூரியன் ஜீவன ஸ்தானத்திற்கு உரியவர்.
நான்காம் ஜாதகத்தைப் பாருங்கள்
மீன லக்னம். ஆறில் குரு. ஆறு என்பது வேலையைக் குறிக்கிறது. 10க்கு உரிய குருவுக்கு சனியின் பத்தாம் பார்வை கிடைக்கிறது. சனி, குரு, 10-ஆம் இடம் எல்லாம் இணைந்து விடுகிறது. 10-ஆம் இடத்தை குரு ஐந்தாம் பார்வையாகப் பார்க்கிறார். வாக்கு ஸ்தானத்தினை செவ்வாய் நான்காம் பார்வையாகப் பார்க்கிறார். சூரியனையும் குரு ஒன்பதாம் பார்வையாகப் பார்க்கிறார். இப்படி எல்லா அமைப்பும் அற்புதமாக இணைந்திருப்பதால், இவரும் கல்லூரி ஆசிரியர்.