Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெருங்கி பழகியபோது எடுத்த வீடியோவை காட்டி அடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்த ஆசிரியர் அடித்துக்கொலை: சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி புதரில் வீச்சு

கடலூர்: கடலூர் அருகே உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டி தொடர்ந்து உல்லாசத்துக்கு அழைத்ததால் ஆசிரியரை அடித்துக் கொலை செய்து, சாக்குமூட்டையில் கட்டி புதரில் வீசியதாக உறவினருடன் கைதான கள்ளக்காதலி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்தவர் விக்டர் (49). கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தற்போது குடும்பத்துடன் கடலூர் தங்கராஜ் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டு காலமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 18ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற விக்டர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து கடந்த மாதம் 28ம் தேதி திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் நெய்வேலி வில்லுடையான்பட்டு முருகன் கோயில் அருகே உள்ள முட்புதரில் சாக்கு மூட்டையில் கட்டிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியபோது, அது காணாமல்போன விக்டர் என்பது தெரிய வந்தது. மேலும் உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், விக்டரின் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தபோது, அவர் காணாமல்போன அன்று குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ஜனனி (21) என்ற இளம்பெண்ணிடம் அடிக்கடி பேசியது தெரியவந்தது.

இதனால் போலீசார் ஜனனியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: ஜனனி பல வருடங்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அப்போது அங்கு இருந்த ஆசிரியர் விக்டரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. அப்போது விக்டர் அடிக்கடி ஜனனியிடம் உல்லாசமாக இருந்துள்ளார். அதை வீடியோவும் எடுத்து வைத்துள்ளார். இதன் பிறகு ஜனனி குடும்பத்தினர் குறிஞ்சிப்பாடிக்கு வந்து விட்டனர். ஜனனி வடலூரில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை கணிப்பொறியியல் படித்து முடித்துள்ளார். இந்நிலையில் கடலூரில் வசித்து வந்த விக்டர் ஜனனியிடம் வீடியோவை காட்டி மிரட்டி, பலமுறை அவரிடம் உல்லாசமாக இருந்துள்ளார். மீண்டும் மீண்டும் வீடியோவை காட்டி உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். இதனால் வெறுப்படைந்த ஜனனி, தன்னை விட்டு விடுமாறு ஆசிரியர் விக்டரிடம் கெஞ்சியுள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து அவரை உல்லாசத்திற்கு வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதை பொறுக்க முடியாத ஜனனி தனது உறவினரான அயன்குறிஞ்சிப்பாடியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (22) என்பவரிடம் இது குறித்து கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் சேர்ந்து விக்டரை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளனர்.

அதன்படி சம்பவத்தன்று ஜனனி விக்டரிடம் உல்லாசமாக இருக்கலாம் வாருங்கள் என்று செல்போனில் பேசி அவரை, குறிஞ்சிப்பாடியில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த தட்சிணாமூர்த்தி, விக்டரிடம் ஜனனியை தொல்லை செய்வதை விட்டு விடுமாறு கூறியுள்ளார். ஆனால் இதற்கு சம்மதிக்காமல் விக்டர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தட்சிணாமூர்த்தி, அங்கு கிடந்த இரும்பு கம்பியால் விக்டரின் தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதன் பின்னர் இருவரும் சேர்ந்து விக்டரை ஒரு சாக்கு மூட்டையில் கட்டியுள்ளனர். பின்னர் யாருக்கும் தெரியாமல் அந்த சாக்கு மூட்டையை தட்சிணாமூர்த்தி தனது பைக்கில் கட்டி, நெய்வேலிக்கு கொண்டு சென்று அங்கு தீயணைப்பு நிலையம் அருகே உள்ள முட்புதரில் வீசிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். விக்டரின் சடலம் போலீசாரால் மீட்கப்பட்ட பிறகு, செல்போன் பதிவுகளின் மூலம் இருவரும் சிக்கினர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிந்து தட்சிணாமூர்த்தி, ஜனனியை கைது செய்தனர். இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.