Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பள்ளி மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்களுக்கு கட்டாய பணி ஓய்வு: தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை

சென்னை: பள்ளி மாணவிகளிடம் ஒழுக்கக் கேடான முறையிலும், தவறான நடவடிக்கைகளிலும் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கட்டாய பணி ஓய்வு உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரித் துள்ளது. இதுகுறித்து தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனிச்சாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தாளாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு போக்சோ சட்டம், பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனை குழு மற்றும் பள்ளிகளில் கல்விசார், கல்வி இணை நிகழ்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளி மாணவிகளிடம் ஒழுக்கக் கேடான முறையிலும், தவறான நடவடிக்கைகளிலும் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன் தண்டனை வழங்குதல், கட்டாய பணி ஓய்வு (Compulsory Retirement) பணி நீக்கம் (Removal), பணியறவு (Dismissal), மற்றும் அவர்களின் கல்விச் சான்றுகளை ரத்து செய்ய பரிந்துரைத்தல் போன்றவை அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுதல் தொடர்பாக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, அனைத்து பள்ளிகளிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைக்க ஆணையிடப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அனுப்பப்பட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு உறுதிமொழி எடுத்தல் ஒவ்வொரு பள்ளிகளிலும் வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு தொடர்பான தகவல்களை அனைத்து மாணவர்களுக்கும் காலை வழிபாட்டு கூட்டத்தில் ஆசிரியர்கள் விளக்கி கூறுதல் வேண்டும். மாணவர் மனசுப் பெட்டி, 14417 மற்றும் 10980 ஆகிய தொடர்பு எண்கள் ஆகியவற்றை மாணவிகள் அறிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் என்எஸ்எஸ், என்சிசி, சாரணர் அமைப்புகள் பள்ளிகளில் செயல்படுத்துவதற்கு முறையான அனுமதி பெற்றிருத்தல் மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு நடத்துதல் சார்ந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் (போஸ்கோ) சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையத்தால் குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வெளியிடப்பட்ட யூடியூப், வீடியோவை பள்ளிகளில் காண்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்டக் கல்வி அலுவலர்களால் பள்ளி முதல்வர்களுக்கு நடத்தப்படும் மாதாந்திரக் கூட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தனியார் பள்ளிகள் இயக்குநர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.