நாகை: நாகை அருகே 6 ஆண்டுகளாக காதலித்து விட்டு, உறவை திடீரென துண்டித்த ஆசிரியையின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி தேப்பிராமங்கலத்தை சேர்ந்தவர் கமலபதி. இவரது மகள் ஜெயஸ்ரீ(24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அருகே உள்ள மருங்கூர்சத்திரம் மெயின் ரோட்டை சேர்ந்த தங்கராசு மகன் மணிகண்டன்(35). கூலித்தொழிலாளி. இவரும், ஜெயஸ்ரீஸ்ரீம் காதலித்து வந்தனராம்.
இது ஜெயஸ்ரீ வீட்டுக்கு தெரிய வந்ததால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதையடுத்து மணிகண்டனிடம் பேசுவதை ஜெயஸ்ரீ நிறுத்திக்கொண்டாராம். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் நேற்று பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிய ஜெயஸ்ரீயை சந்தித்த மணிகண்டன் அவரிடம் தகராறில் ஈடுபட்டள்ளார். திருமருகல் பஸ் நிலையம் அருகே அழைத்து சென்று, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயஸ்ரீயின் கழுத்தை அறுத்து விட்டு மணிகண்டன் தப்பி ஓடிவிட்டார்.
படுகாயமடைந்த ஜெயஸ்ரீ திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து மணிகண்டனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.