*வீடியோ வைரல்: தெலங்கானாவில் பரபரப்பு
திருமலை : பேய் இருப்பதாக நம்பிய மாணவர்களின் பயத்தை போக்க அமாவாசை இரவில் வகுப்பறையில் ஆசிரியர் படுத்து உறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலங்கானா மாநிலம் அதிலாபாத் மாவட்டம் ஜெய்நாத் மண்டலம் ஆனந்த்பூரில் மண்டல் பரிஷத் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த வாரம் நூதால ரவீந்தர் எனும் ஆசிரியர் பணியிடம் மாற்றத்தில் வந்தார். பள்ளியில் வழக்கம்போல் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது வெளியே மரம் ஒன்று விழுந்ததால் மாணவர்கள் அச்சத்தில் நடுங்கினர். ஏன் இவ்வாறு உள்ளீர்கள் என கேட்டதற்கு மாணவர்கள் வகுப்பறையில் பேய் உள்ளதாக கூறினர்.
மேலும் கடந்த ஆண்டு 5ம் வகுப்பில் படித்து வந்த ஷ்ரவன் பேய் பயம் காரணமாக வேறு பள்ளிக்கு சென்றதாக கூறினர். இதனை கேட்ட ஆசிரியர் ரவீந்தர் பேய் இல்லை எனகூறினார். ஆனாலும் மாணவர்கள் பேய் இருப்பதை உறுதியாக நம்பினர். காலியாக உள்ள வகுப்பறையில் இருந்து அடிக்கடி விசித்திரமான சத்தம் கேட்பதாக கூறினர். பேயை தவிர வேறு யாரால் இதுபோன்ற ஒலிகளை எழுப்ப முடியும் என்று அவர்கள் வாதிட்டனர்.
இதனால் பேய் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என உறுதியாக இருந்த அறிவியல் பகுத்தறிவாளர் சங்க செயலாளரான ஆசிரியர் ரவீந்தர் காலியாக இருந்த 5ஆம் வகுப்பு அறையில் படுக்க முன்வந்தார். இதற்காக கடந்த ஜூலை 5ம் தேதி, அமாவாசை இரவில் அவ்வாறு செய்யுமாறு மாணவர்கள் வலியுறுத்தினர். இதற்கு ரவீந்தர் ஒரு நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டார்.
அதில் இந்த ஏற்பாடு அவருக்கும் மாணவர்களுக்கும் இடையே ரகசியமாக இருக்க வேண்டும் என்றார். இதனையடுத்து கடந்த அமாவாசை அன்று இரவில், ரவீந்தர் பெட்ஷீட் மற்றும் டார்ச்சுடன் பள்ளிக்கு வந்தார். மாணவர்கள் பார்க்கும் போது அவர் இரவு 8 மணிக்கு 5 ஆம் வகுப்பில் நுழைந்தார். இரவு எந்த அசம்பாவிதமும் இன்றி கழிந்தது, மறுநாள் மாணவர்கள் ஆர்வத்துடன் காலை 6 மணிக்கு வகுப்பறைக்கு வெளியே கூடினர். ரவீந்தர் உயிருடன் வெளியே வந்தபோது, பேய் இல்லை என்று மாணவர்கள் இறுதியாக
நம்பினர்.
காலையில் தன்னை பார்க்க வந்த மாணவர்களிடம் கடைசியில் பேய் இல்லை என்று உறுதியாக இருக்க வேண்டும் என்றார். இதனையடுத்து பேய்கள் இல்லை என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறி எங்கள் பயத்தை போக்கிய ஆசிரியருக்கு நன்றி என மாணவர்கள் கூறினர். தற்போது இந்த வீடியோ சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.