ஆலந்தூர்: டீக்கடையை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக, அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது பெயின்டர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சித்தாலப்பாக்கம், ராஜிவ்காந்தி தெருவை சேர்ந்தவர் சுனில்குமார் (54), பெயின்டர். இவர் ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலை சந்திப்பில் உள்ள தனது கடையை வாடகைக்கு விட்டிருந்தார். இங்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன், டீக்கடை நடத்தியவர் இறந்ததால், கடை பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், தனது கடையை சுனில்குமார் திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு வேறொரு பூட்டு போடப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சுனில்குமார், இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது, அதிமுக முன்னாள் கவுன்சிலர் குட்டி ராமதாஸ் (57), இந்த கடையில் இருந்த பூட்டை உடைத்துவிட்டு, புதிதாக பூட்டு போட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, சுனில்குமார், அதிமுக முன்னாள் கவுன்சிலர் குட்டி ராம்தாஸ் தனது கடையை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக பரங்கிமலை காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


