Monday, July 22, 2024
Home » தேநீர்!

தேநீர்!

by Lavanya

எங்கேயும்… எப்போதும்…

இன்றைய காலகட்டத்தில் உலக மக்கள் அனைவரும் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகமாக அருந்துவது தேநீரைத்தான். காலையில் எழும்போது தொடங்கி இரவில் தூங்கப்போவது வரை தேநீர் நம்முடன் தொடர்ந்து பயணிக்கும் நண்பனாக இருக்கிறது. அலுவலகத்தில், வீட்டில் என எங்கு இருந்தாலும் தேநீர் நமக்கு துணையாகவே இருக்கிறது. வீட்டிற்கு உறவினர்கள் வந்தாலும், நம்மைத் தேடி நண்பர்கள் வந்தாலும் அவர்களை உபசரிப்பதற்கும் தேநீர்தான் உதவிபுரிகிறது. இப்படி நம் வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்ட தேநீர் உருவானதற்கும் ஒரு சுவாரஸ்ய கதை இருக்கிறது. பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பு சீனாவில் ஷென்னங் என்ற சீன விவசாயி ஒருவர், மூலிகைகளைத் தேடி காட்டுக்குள் சுற்றிக் கொண்டிருந்தாராம். அப்போது அந்தக் காட்டுக்குள் இருந்த பல்வேறு செடிகளின் இலைகளைப் பறித்து சாப்பிட்டுப் பார்த்திருக்கிறார்.

அதில் அவருக்கு தெரியாமலேயே சுமார் 72 விஷச்செடிகளின் இலைகளை சாப்பிட்டு விட்டாராம். இதனால், சோர்ந்து போய் ஓரிடத்தில் அமர்ந்திருக்கிறார். அந்த சமயத்தில் காற்று பலமாக வீசி இருக்கிறது. அப்போது காற்றில் பறந்து வந்த ஒரு இலை அவரது வாயில் பட்டதாம். அதையும் அவர் கடித்து மெல்ல ஆரம்பித்தாராம். அந்த இலையை மென்று விழுங்கியதும், சற்று நேரத்திற்கு எல்லாம் சோர்ந்து போயிருந்த அவர் திடீரென புத்துணர்வு பெற்று எழுந்து நடக்கத் தொடங்கினாராம். அப்படி அவர் சாப்பிட்டதும் புத்துணர்வு கொடுத்தது என்ன இலை தெரியுமா? சாட்சாத் நம்ம டீ இலைதான். அந்த இலையில் இப்படி ஒரு மகத்துவம் இருக்கிறதா என வியந்த ஷென்னங், அந்த இலை கொண்ட செடிகளைக் கண்டறிந்து, அவற்றை தனது கிராமத்திற்கு கொண்டு வந்து பயிரிட்டுப் பார்த்துள்ளார்.

இப்படித்தான் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் டீ இலைகள் பயிரிடப்பட்டதாக பல சான்றுகள் கூறுகின்றன. மேலும், அப்போதைய சீன மக்கள் டீ இலைகளைப் பறித்து கீரையைப் போன்று வேக வைத்து மசித்து சாப்பிட்டு இருக்கிறார்கள். அதன்பின்னர், சுமார் 1500 வருடங்களுக்கு முன்புதான் டீ ஒரு பானமாக மாறி இருக்கிறது. இதை சாப்பாடாகவும் சாப்பிட்டு இருக்கிறார்கள். பானமாகவும் அருந்தியிருக்கிறார்கள். அதன்பிறகு சில ஆண்டுகள் கழித்தே காய வைத்த டீ இலையைப் பொடியாக்கி தண்ணீருடன் சேர்த்ததும், வேறுவித சுவை தருகிறது என்பதைக் கண்டுபிடித்தனர். அதன்பின்னர், வேறு சில பரிசோதனைகளுக்குப் பிறகு, சாப்பாடாக சாப்பிடுவதை நிறுத்தியுள்ளனர். இப்படி டீ இலைகளை உலர்த்தி பொடியாக்கிச் சலித்து பொடியைத் தண்ணீருடன் சேர்த்து அருந்துவதை மேட்சா மாட்சா என பெயர் வைத்தனர் சீனர்கள்.

டீயை ஒரு பானமாக அருந்த ஆரம்பித்த பிறகு அரசர்களும், கலைஞர்களும் டீயின் மகத்துவத்தைப் பற்றி நிறைய எழுத ஆரம்பித்தார்கள். 9ம் நூற்றாண்டில் டான் டைனஸ்ட்டியைச் சேர்ந்த அரசர்கள் ஆட்சி புரிந்து கொண்டிருந்தபோது, சீனா சென்றிருந்த ஜப்பானியர் ஒருவர் டீயை ஜப்பானிற்கு கொண்டு சென்றுள்ளார். அதன்பின்னர், ஜப்பானிலும் டீ பிரபலமானது. அங்கேயும் டீயை பயிர் செய்ய ஆரம்பித்தனர். 14ம் நூற்றாண்டில் சீனாதான் பட்டு, பீங்கான் மற்றும் டீ ஏற்றுமதியில் முதன்மை பெற்ற நாடாக விளங்கியது. பின்னர், படிப்படியாக சீன டீயின் சுவை உலகம் முழுக்க பரவத் தொடங்கியது. 16ம் நூற்றாண்டில், டச்சுக்காரர்கள் கப்பல் மூலமாக சீனாவுக்கு வந்து டீ இலைகளை வாங்கிச் சென்று ஐரோப்பா முழுவதும் பிரபலப்படுத்த ஆரம்பித்தார்கள்.

16ம் நூற்றாண்டின் இறுதியில், பிரிட்டிஷ் கம்பெனி உலகம் முழுக்க கனடா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஆப்பிக்கா போன்ற நாடுகளுக்கும் டீயைப் பரப்ப ஆரம்பித்தது. 1700ல் ஒரு டீயின் விலை காபியின் விலையை விட பத்து மடங்கு அதிகமாக இருந்ததாம். இப்போது உலகம் முழுக்க டீ பரவியிருந்தாலும், டீ உற்பத்தியில் சீனாதான் முதலிடத்தில் இருக்கிறது. ஒரு கட்டத்தில் டீ உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பிரிட்டன்காரர்கள், ஓபிஎம் என்று சொல்லப்படும் ஒரு வகை போதை தரும் கஞ்சாச் செடியைக் கொடுத்து டீயை வாங்கி வந்தனர். இதனால், சீன மக்கள் அதிகமாக போதைக்கு அடிமையாகி, ஆரோக்கிய சீர் குலைவுக்கு ஆளானார்கள். அதனால், சீன அரசு ஓபிஎம்முக்கு தடை செய்து அதனை கொளுத்தவும் செய்தார்கள்.

பின்னர், டீ யை கொடுக்கவும் மறுத்தார்கள். இதனால் சீனர்களுக்கும், பிரிட்டிஷ்காரர்களுக்கும் இடையில் முதன்முதலில் போர் மூண்டது. இதனை ஃபர்ஸ்ட் ஓபிஎம் வார் என கூறுகிறார்கள். இதற்கிடையில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி, சீனாவுக்கு சிலரை அனுப்பி, சில டீ செடிகளையும், அதனைப் பயிர் செய்யத் தெரிந்த விவசாயிகள் சிலரையும் கடத்தி வருமாறு உத்தரவிட்டுள்ளது. அங்கு சென்ற நபர்கள் டீ செடிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் கடத்தி வந்து டார்ஜிலிங் மலைப்பிரதேசத்தில் சேர்த்தனர். அங்குதான் முதன்முதலில் சீனாவில் இருந்து வந்த விவசாயிகளை வைத்து டீயைப் பயிர் செய்தார்கள். பின்னர், ஊட்டி, மூணாறு, அசாம் என இந்தியா முழுக்க டீ விவசாயம் பரவத் தொடங்கியது.

அதற்குப் பிறகு, மற்ற நாடுகளுக்கும் டீ விவசாயம் பரவத் தொடங்கியது. ஒவ்வொரு நாட்டிற்கும் அவரவர் சுவைக்கேற்ப டீயைத் தயாரித்தனர். அந்த வகையில், துருக்கியில் ஒரு வித்தியாசமான டீ, இலங்கையில் வேறுவிதமான டீ, திபெத்தில் உப்பு கலந்த டீ, இந்தியாவில் இஞ்சி டீ, ஏலக்காய் டீ, கறுப்பு டீ, க்ரீன் டீ, எலுமிச்சை டீ என உலகம் முழுக்க பல வகைளில் டீ அவதாரம் எடுத்திருக்கிறது. இப்போது சீனாவுக்கு அடுத்தபடியாக டீ உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் உலகளவில் சுமார் 74 சதவீத டீயை இந்தியா உற்பத்தி செய்வதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இத்தாலி ஃபுட்… எப்பவும் டேஸ்ட்!

உலகிலேயே சிறந்த உணவு கிடைக்கும் நாடுகளில் இத்தாலிதான் முதன்மையானது எனச் சொல்கிறது ஒரு ஆய்வு. அதேபோல, இத்தாலிய மக்களின் முக்கியமான உணவுக் கண்டுபிடிப்பு என்றால் அது பீட்சாதான். இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பீட்சாதான் இப்போது உலகம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கிறது. அதேபோல, இத்தாலியின் உணவுகளைப் பற்றி பேசுவது மிகவும் கடினமான விசயம். ஆனால், அவற்றை சுவைத்துப் பார்ப்பது வெகு சுலபம். அந்தளவிற்கு அந்த நாட்டு உணவுகளின் சுவை அபாரமானதாக இருக்கும். இத்தாலியில் கிடைக்கும் உணவுகள் பலவும் பெரும்பாலும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்களில்தான் இருக்கும்.

இந்த நிறத்தில் கிடைக்கும் இத்தாலிய உணவுகள் அனைத்துமே பார்ப்பதற்கு அழகாகவும் அதேசமயம் சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும். பொதுவாக இத்தாலிய உணவுகள் ரொட்டி, தக்காளி மற்றும் ஆலிவ் ஆயில் கொண்டு தயாரிக்கப்படுபவை. தரமான உணவுப் பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படுவதால் இத்தாலிய உணவுகள் எப்போதும் சுவையோ சுவை. அதுவே அதன் ரகசியமும் கூட. இத்தாலியில் கிடைக்கக்கூடிய காஃபியை உலகம் முழுவதுமே எஸ்பிரஸோ என்று அழைக்கிறார்கள். அந்தளவிற்கு அந்த நாட்டின் காஃபியும் உலகம் முழுவதும் படு ஃபேமஸ். இத்தாலிய சமையல் கலைஞர்கள் பெரும்பாலும் தரமில்லாத பொருட்களை வைத்து அவர்களது சமையலை சமைப்பது கிடையாது. அதேமாதிரி, அந்த நாட்டில் சமைக்கப்படும் உணவுகள் அனைத்துமே ஆலிவ் ஆயில் கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது.

 

You may also like

Leave a Comment

six + nineteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi