சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஏ 1 சைக்கிள் நிறுவன உரிமையாளர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் பிரபல ஏ 1 சைக்கிள் நிறுவன உரிமையாளர் சுந்தர பரிபூரணம் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படக்கூடிய நுங்கம்பாக்கத்தில் உள்ள மற்றொரு தனியார் நிறுவனரின் வீடு மற்றும் உரிமையாளர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதங்களை தவிர்க்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனையானது இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஏ 1 சைக்கிள் நிறுவன உரிமையாளர் சுந்தர பரிபூரணம் கடந்த அதிமுக ஆட்சியில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு ஒப்பந்தம் பெற்று அரசு பள்ளிகளுக்கு சைக்கிள் விநியோகம் செய்தவர் என்பது நினைவுகூரத்தக்கது. தற்போது தமிழகம் முழுவதும் கெமிக்கல், மெட்டல், சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் POEL என்டர்பிரைசஸ், POCs என்டர்பிரைசஸ், ஏ1 சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.