வாஷிங்டன்: வரிச் சலுகைகள் மற்றும் செலவு குறைப்புக்கான மசோதா தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் உலக பணக்காரர் எலான் மஸ்க் இடையே மீண்டும் வார்த்தை போர் வெடித்துள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி மிரட்டி உள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற உலகின் பெரும் பணக்காரரரும் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் தீவிரமாக பணியாற்றினார்.
இதற்காக டிரம்ப் தலைமையில் ஆட்சி அமைந்ததும், அரசின் செலவினங்களை குறைக்க அரசு செயல்திறன் குழு என்ற துறையை உருவாக்கி அதன் தலைவராக எலான் மஸ்கை டிரம்ப் நியமித்தார். ஆரம்பத்தில் இருவரும் ஒருவரையொருவர் வெகுவாக பாராட்டி பல அதிர்ச்சிகரமான நடவடிக்கைகளை எடுத்தனர்.
இதற்கிடையே, வரிச் சலுகைகள் மற்றும் அரசின் செலவு குறைப்புக்கான மசோதாவை அதிபர் டிரம்ப் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார். இந்த மசோதா மூலம் மின்சார வாகனங்களுக்கு வழங்கப்படும் சலுகை முற்றிலும் ரத்து செய்யப்படும். இதனால் மின்சார வாகனங்கள் மீதான அமெரிக்கர்களின் ஆர்வம் முழுமையாக குறைந்து விடும். இது தனது தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதன் காரணமாக டிரம்ப்-மஸ்க் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த மே மாத இறுதியில் அரசு செயல்திறன் குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக மஸ்க் அறிவித்தார். அதன்பின் டிரம்ப், மஸ்க் இருவரும் ஒருவரை ஒருவரை மாறி மாறி விமர்சனம் செய்ததால் மோதல் தீவிரமடைந்தது. ஒருகட்டத்தில் திடீரென பின்வாங்கிய மஸ்க், அதிபர் டிரம்பிடம் மன்னிப்பு கேட்டு அமைதியானார்.
தற்போது வரிச் சலுகைகள் மசோதா பிரதிநிதிகள் அவையில் நிறைவேறியதைத் தொடர்ந்து செனட் அவை ஒப்புதலுக்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மசோதா மீது செனட் அவையில் விவாதிக்கப்படும் நிலையில் கடந்த 3 நாட்களாக அதிபர் டிரம்ப்- மஸ்க் இடையே மீண்டும் வார்த்தை போர் வெடித்துள்ளது.
எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில், ‘‘இந்த மசோதா குடியரசு கட்சியின் அரசியல் தற்கொலை. இது அரசின் செலவினத்தை குறைக்காது. மாறாக மிகப்பெரிய கடனுக்கு வழிவகுக்கும்.
வளர்ந்து வரும் தொழில்களை மூழ்கடிக்கும். இந்த மசோதாவை கொண்டு வந்தால் குடியரசு கட்சி அடுத்த தேர்தலில் நிச்சயம் தோல்வியை சந்திக்கும். ஒருவேளை இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நான் ஒரு புதிய அரசியல் கட்சியை உருவாக்குவேன். ஜனநாயக கட்சி, குடியரசு கட்சிகளுக்கு மாற்றாக அமெரிக்க கட்சியை உருவாக்குவேன்’’ என்றார்.
இதனால் கோபமடைந்த அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘வரலாற்றில் எந்த மனிதனும் பெறாத வரி சலுகைகளை பெற்றவர் எலான் மஸ்க். இதுவரை அவர் மின்சார வாகன உற்பத்திக்காக நிறைய சலுகைகளை அனுபவித்து விட்டார். இந்த மாதிரியான வரிச்சலுகை இல்லாவிட்டால் அவர் கடையை மூடிவிட்டு சொந்த நாடான தென்னாப்பிரிக்காவுக்கு செல்ல வேண்டியிருக்கும்.
தேசத்திற்கான செலவுகளை மிச்சப்படுத்த வேண்டும். ஒருவேளை ராக்கெட் ஏவுதல்கள், செயற்கைகோள் ஏவுதல், மின்சார கார் உற்பத்தி இல்லை என்றால் மிக அதிக பணத்தை சேமிக்கலாம். எனவே மஸ்க் வருத்தப்படுவதை விட அதிகமாக இழக்க நேரிடும். அவர் பதவி வகித்த அரசு செயல்திறன் அமைப்பே எலானுக்கு எதிரான அசுரனாக மாறலாம்’’ என மிரட்டி உள்ளார்.