மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 2014ல் ஆட்சி அமைத்த பிறகு நாட்டின் வரிவிதிப்பு விகிதங்கள் தாறுமாறாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. எதற்கெடுத்தாலும் வரி விதிப்பது மோடி அரசின் ஸ்டைல். அதனால் தான் நாட்டில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ெணய், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. ஒரு கிலோ அரிசி விலை இரண்டு மடங்கு அளவுக்கு உயர்ந்து இருக்கிறது என்றால் காரணம் மோடி அரசின் வரிதான்.
ஜிஎஸ்டி என்று அமல்படுத்தப்பட்டதோ அன்று முதல் வரிபயங்கரவாதம் விதவிதமான முறைகளில் நாட்டு மக்களை பாடாய்படுத்தி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஜிஎஸ்டி அமல்படுத்த திட்டமிடப்பட்டது. அன்று அதை கடுமையாக எதிர்த்தவர், அப்போது குஜராத் முதல்வராக இருந்த இன்றைய பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் 2014ல் மோடி பிரதமரானதும் ஜிஎஸ்டி வரி விகிதத்தை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டி நடைமுறைப்படுத்தினார். அதே போல் தான் ஆதார் திட்டமும். முதல்வராக இருந்த போது எதிர்த்தார்.
பிரதமரானதும் ஆதார் தான் எல்லாம் என்று கூறிவிட்டார் மோடி. ஒன்றிய பா.ஜ அரசின் திட்டமிடா செயலால் வரி பயங்கரவாதம் நாட்டை கடுமையாக உருக்குலைத்து வருகிறது. இந்த ஆண்டு வருமானவரி கட்டியவர்கள் எண்ணிக்கை 7.28 கோடியாக உயர்ந்து இருக்கிறது. அதாவது வருமானத்திற்கு நேரடி வரி கட்டியவர்கள். ஆனால் மறைமுக வரியை நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் கட்டி வருகிறார்கள். நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் எக்கச்சக்க வரியை விதித்து இருக்கிறது ஒன்றிய அரசு.
இதனால் நமது வருமானத்தில் 70 முதல் 80 சதவீதம் வரியாக கட்டுகிறோம் என்று ஆம்ஆத்மி எம்பி ராகவ் சதா நாடாளுமன்றத்தில் குறைபட்டுக்கொண்டார். ஐரோப்பா போல் நாம் வரி கட்டுகிறோம். ஆனால் சோமாலியா போன்று வசதிகள் தான் நமக்கு கிடைக்கிறது என்று அவர் ஆதங்கப்பட்டார். அந்த நிலை தான் இன்று இந்தியா முழுவதும் நீடிக்கிறது. இப்போது ஆளும் தரப்பில் இருந்து ஒன்றிய அரசின் வரிவிதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழும்பி இருக்கிறது.
ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி தான் திடீரென ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அதிலும் குறிப்பாக எல்ஐசி, மருத்துவ காப்பீடு ஆகியவற்றிக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு இருப்பதை நீக்க வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், எதிர்க்கட்சிகள் அதை கையில் எடுத்துக்கொண்டு விட்டனர்.
ஏற்கனவே நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள வரிபயங்கரவாதத்தால் சிறுகுறு தொழில்கள் அழிந்து விட்ட நிலையில், தனிப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தையும் மோடி அரசின் வரி விதிப்பு முறை உருக்குலைத்து வருகிறது. எனவே ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அடியோடு மாற்ற கோரியும், எல்ஐசி, மருத்துவ காப்பீடு திட்டங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியை ரத்து செய்யவும் வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது வரி பயங்கரவாதம் என்று எழுதப்பட்ட பேனர்களை அவர்கள் கையில் ஏந்தியபடி போராட்டத்தில் பங்கேற்றனர். எல்ஐசி, மருத்துவ காப்பீடு திட்டங்களுக்கு கூட 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிப்பது மிகவும் கொடுமை என்று குரல் கொடுத்தனர். இந்த குரல் மோடி அரசின் காதில் கேட்க வேண்டும். அப்போது தான் வரிபயங்கரவாதத்திற்கு தீர்வு கிடைக்கும்.