Tuesday, June 18, 2024
Home » வரி நிர்வாகத்தில் எளிய நடைமுறையின் பயனாக கூடுதலாக ரூ.40,399.51 கோடி வருவாய் வசூல் செய்யப்பட்டு சாதனை: தமிழ்நாடு அரசு தகவல்

வரி நிர்வாகத்தில் எளிய நடைமுறையின் பயனாக கூடுதலாக ரூ.40,399.51 கோடி வருவாய் வசூல் செய்யப்பட்டு சாதனை: தமிழ்நாடு அரசு தகவல்

by MuthuKumar

சென்னை: வரி நிர்வாகத்தில் எளிய நடைமுறையின் பயனாக கூடுதலாக ரூ.40,399.51 கோடி வருவாய் வசூல் செய்யப்பட்டு சாதனை நடைபெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு புதிய திட்டங்களின் மூலம் இனிவரும் காலங்களில் அரசுக்கு கூடுதலாக வருவாய் கிடைப்பதை அரசு உறுதி செய்யும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தருவதில் முக்கியப் பங்கு வகிக்கும் வணிக வரித்துறையில் தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான செயல்திறன்மிக்க ஆட்சியில், வணிகவரித் துறையின் வாயிலாக பல்வேறு சீரமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, வரி விதிப்பில் எளிய நடைமுறை, துறையில் நிர்வாக சீர்திருத்தங்களுடன் கூடிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், அறிவியல் பூர்வமான பல தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மின்னாளுமைத் திட்டம், வணிகர்கள் பயன்பெறும் வகையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சமாதான் திட்டம், வருவாய் இழப்புகளைக் கண்டறிந்து, வருவாய் வளர்ச்சியை அதிகரிக்கும் வண்ணம் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், எனது விலைப்பட்டி எனது உரிமை, கட்டணமில்லா சேவை மையம், புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வணிக நட்புச் சூழலை உருவாக்கிட எளிய வணிகப்பிரிவு உருவாக்கம், வணிகர் நல வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல, நல்லபல திட்டங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் திறம்பட செயல்படுத்தப்பட்டுள்ளதன் பயனாக, வணிகவரித் துறையில் ஏறத்தாழ 47.19 சதவீதம் கூடுதலாக அதிக வருவாய் ஈட்டப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்த வருவாயின் மூலம் தமிழ்நாட்டின் ஏழை எளிய மக்கள் பயன்பெறுகின்ற வகையில், இந்தியாவில் இதுவரையில் எந்த மாநில அரசுகளும் முன்னெடுக்காத வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அருந்தவப் புதல்வர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் உதித்த திட்டங்களான விடியல் பயணத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 உள்ளிட்ட பல சிறப்பு வாய்ந்த திட்டங்கள் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டு, ஏழை எளிய மக்களின் ஏகோபித்த நல் ஆதரவுடன் முன்னணி மாநிலமாகவும், முதன்மை மாநிலமாகவும் திகழ்ந்து வருகிறது.

தமிழ்நாட்டில் சிறு அளவில் வணிகத்தில் ஈடுபடும் வணிகர்களின் நலனைப் பாதுகாத்திடும் பொருட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பிலிருந்த 1989 ஆம் ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக, வணிகர் நல வாரியத்தினை உருவாக்கிச் சாதனை படைத்தார். ஏறத்தாழ 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ள இந்த வாரியத்தின் வாயிலாக, பல்வேறு நலத்திட்டங்களான குடும்ப நல உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி, விளையாட்டு வீரர்களுக்கான உதவி, சிறு கடைகள் அமைத்திட நிதியுதவி, திருமண உதவி மற்றும் விபத்துக்கால உதவி என்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

வரி நிர்வாகத்தில் எளிய நடைமுறையின் பயனாக கூடுதலாக ரூ.40,399.51 கோடி ரூபாய் வருவாய் வசூல் செய்யப்பட்டு சாதனை
வரி நிர்வாகத்தில் பல்வேறு எளிய நடைமுறைகளும், மின்னாளுமைத் திட்டத்தின் வாயிலாக வலைத்தளங்களின் மூலமாக வரிகளை செலுத்துவதில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை தொடர்ந்து செயல் படுத்தியதின் பயனாக, முந்தைய ஆட்சியில் (2020-21) ரூ.85,606.41 கோடி ரூபாய் ஆக இருந்த மொத்த வரி வசூல் வருவாயானது நடப்பாண்டில் (2023-2024) 1,26,005.92 கோடி ரூபாய் ஆக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளில் 40,399.51 கோடி ரூபாய் அதிகமாக ஈட்டப்பட்டு 47.19 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

வணிகர்கள் பயன்பெறுகின்ற வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமாதான திட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி முந்தைய சட்டங்களின் வரி நிலுவைகளை வசூலிக்கும் பொருட்டு, வணிகர்கள் பயனடையும் வகையில் சமாதான திட்டம் 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு வரிகள் (நிலுவைகளை தீர்வு செய்தல்) சட்டம் (சட்ட எண் 24/2023) இயற்றப்பட்டு 16.10.2023 முதல் 31.03.2024 வரை நடைமுறையில் இருந்தது. இத்திட்டத்தின் கீழ், ரூ.50,000 வரை நிலுவைத் தொகை உள்ள 1,15,805 இனங்களில் மொத்தக் கேட்புத் தொகையான ரூ. 142.56 கோடியை தள்ளுபடி செய்து ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், ரூ.50,000-க்கு மேல் நிலுவைத் தொகை இருந்த இனங்களில், ரூ.247.89 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது, இது முந்தைய சமாதான திட்டங்களுடன் ஒப்பிடும் போது இதுவரை வசூலானதில் அதிகபட்ச தொகையாகும்.

ரூ.62 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிருவாகச் சீர்திருத்தங்கள்
● ரூ. 39.29 கோடி மதிப்பீட்டில் 24 வணிக வரி அலுவலகங்களுக்கான
12 வணிக வரி புதிய கட்டடங்கள், ரூ. 19 கோடி மதிப்பீட்டில் வணிகவரித்துறையின் சுற்றும் படை அலுவலர்களுக்கு 100 புதிய வாகனங்கள், ரூ.3.06 கோடி மதிப்பீட்டில் சுற்றும் படை அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், உரிய அறிவுரைகளை வழங்கிடவும் புதிய மாநில மைய கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த நிதியாண்டில் துறையின் நுண்ணறிவுப் பிரிவு ஆய்வுக் குழுக்கள் ரூ. 1095.93 கோடி வருவாயும் சுற்றும் படைகள் மூலமாக ரூ.217.68 கோடி வருவாயும் பெறப்பட்டுள்ளன.
● திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், ஓசூர், திருப்பூர் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களைத் தலைமையிடமாகக் கொண்ட ஏழு புதிய நிர்வாகக் கோட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதிக வரி செலுத்துவோர் பிரிவு உட்பட நிர்வாக கோட்டங்களின் எண்ணிக்கை 12-லிருந்து 19-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
● செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், ஓசூர், திருப்பூர் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களைத் தலைமையிடமாகக் கொண்ட ஆறு புதிய நுண்ணறிவு கோட்டங்கள் உருவாக்கப்பட்டதன் மூலம் நுண்ணறிவு கோட்டங்களின் எண்ணிக்கை 9-லிருந்து 15-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
● ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கு இணையாக குறைந்தபட்சம் ஒரு வணிகவரி மாவட்டத்தைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்காக துறையின் கள அலுவலகங்கள் மறுசீரமைக்கப்பட்டு, 13 புதிய வணிகவரி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதனால், வணிகவரி மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 42-லிருந்து 55-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட வரி ஆய்வுக்குழு
வணிகவரித்துறையில் 30.12.2022 அன்று புதிதாக உருவாக்கப்பட்ட வரி ஆய்வுக் குழு (TRU) பரிந்துரை/பகுப்பாய்வு அடிப்படையில் முதல் கட்டமாக மார்ச் 2024 இல் தமிழ்நாடு அரசுக்கு ரூ. 510.09 கோடி கூடுதல் ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (IGST) தீர்வு கிடைத்துள்ளது.

வருவாய் இழப்புக்களை ஆராய இந்திய தொழில்நுட்ப நிறுவனம்-ஹைதராபாத் (IIT-Hyderabad) புரிந்துணர்வு ஒப்பந்தம்
வணிகவரித்துறையில் இதுவரையில் இல்லாத வகையில், வருவாய் இழப்புகளை தரவுகள் பகுப்பாய்வு (Big data Analytics) மூலம் ஆராய்ந்து வருவாய் வளர்ச்சியைக் கூட்டும் இனங்களை கண்டறியும் வகையில் முதன்முறையாக, இந்திய தொழில்நுட்ப நிறுவனம்-ஹைதராபாத் (IIT-Hyderabad) புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேற்கொண்டதன் அடிப்படையில், கடந்த நான்கு மாதங்களில் ரூ.129.77 கோடி கூடுதலாக வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

வணிகம் செய்வதை எளிதாக்கி வருவாயை ஈட்டிட எளிய வணிகப் பிரிவு தொடக்கம்
அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையிலும், வணிகம் செய்வதை எளிதாக்கிடும் வகையிலும் வணிகவரித்துறையில் முதன்முறையாக கடந்த ஜூலை திங்கள் 2023 முதல் ‘எளிய வணிகப்பிரிவு’ தொடங்கப்பட்டுள்ளது. மேலும், தனி தணிக்கை பிரிவு, கூடுதல் ஆணையர் (கணினிகள்) மற்றும் கூடுதல் ஆணையர் (வரி ஆய்வு) ஆகிய இரண்டு புதிய பணியிடங்கள், 1000 உதவியாளர் பணியிடங்கள் தரம் உயர்த்தி 840 துணை வணிகவரி அலுவலர் பணியிடங்களாகவும் 160 வணிகவரி அலுவலர் பணியிடங்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பதவி உயர்வுகள் துறையின் பல்வேறு நிலைகளில் உத்தரவிடப்பட்டு, 7 கூடுதல் ஆணையர்கள், 23 இணை ஆணையர்கள், 76 துணை ஆணையர்கள், 96 உதவி ஆணையர்கள், 296 மாநில வரி அலுவலர்கள் மற்றும் 975 துணை மாநில வரி அலுவலர்கள் ஆகியோர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளன.

வணிகர் நல வாரியத்தின் வாயிலாக 8,880 பயனாளிகளுக்கு ரூபாய் 3.20 கோடியில் நலத்திட்ட உதவிகள்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் தமிழ்நாடு வணிகவரித் துறையின் வரலாற்றில் முதன்முறையாக 1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வணிகர் நல வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 1 இலட்சம் ரூபாயாக இருந்த குடும்ப நல உதவி ரூபாய் 3 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மருத்துவ உதவி திட்டத்தின் கீழ் இதயம் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு ரூபாய் 50 ஆயிரமும், செயற்கை சிறுநீர் பிரிப்பு, கதிர்வீச்சு அறுவை சிகிச்சைகளுக்கு ரூபாய் 25 ஆயிரமும், கருப்பை அறுவை சிகிச்சைக்கு ரூபாய் 20 ஆயிரமும் வழங்கப்படுகின்றன.

கல்வி உதவித் திட்டத்தின் கீழ் தொழில்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தலா 10 ஆயிரமும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தலா 5 ஆயிரமும் வழங்கப்படுவதோடு, 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு நிதி உதவியும் வழங்கப்படுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைக்கிணங்க, விபத்துக்கால உதவித் தொகையாக ரூபாய் 25 ஆயிரமும், திருமண உதவித் தொகையாக தலா 10 ஆயிரமும் வழங்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 8,880 உறுப்பினர்களுக்கு ரூபாய் 3.2 கோடி நிதி உதவி வழங்கப்பட்டு வணிகர் நலன் பேணப்பட்டுள்ளது. மேலும், வணிகர் நல வாரியத்தின் வாழ்நாள் உறுப்பினருக்கான பதிவுக் கட்டணம் ரூ.500 செலுத்துவதிலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டதன் பயனாக, 40,994 உறுப்பினர்கள் இந்த வாரியத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் பயன்பெறும் வண்ணம் “எனது விலைப்பட்டி எனது உரிமை”த் திட்டம்
பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு உரிய விலைப்பட்டியை கேட்டுக்பெறும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு வணிகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையிலும் அரசுக்கு வருவாயை பெருக்கிடும் முனைப்பிலும் “எனது விலைப்பட்டி எனது உரிமை” என்கின்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நுகர்வோர் தங்களின் விலைப்பட்டியலை அரசு இணையத்தளம் அல்லது கைபேசி செயலின் மூலம் பதிவேற்றம் செய்து காலமுறை அடிப்படையில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுத் தொகையும் வழங்கப்படவுள்ளது.

பெட்ரோல் மீதான வரி விகிதக் குறைப்பு
சாமானிய மக்கள் பயன்படும் வகையில், தமிழ் நாட்டில் பெட்ரோல் மீது லிட்டர் ஒன்றுக்கு 15% + ரூ.13.02 என்று இருந்த வரியை 13% + ரூ.11.52 ஆக 14.08.2021 முதல் குறைக்கப்பட்டு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3/- குறைக்கப்பட்டது.

இயற்கை பேரிடர் காலங்களில் வணிகவரித்துறையின் பங்கு
* கோவிட்-19 சிகிச்சை மற்றும் மேலாண்மைக்கு உபயோகப் படுத்தப்பட்ட குறிப்பிட்ட மருந்துகள், மருத்துவ கருவிகள், சோதனை கருவிகள் மற்றும் நிவாரண பொருட்கள் போன்றவற்றிற்கு 31.12.2021 வரை சரக்குகள் மற்றும் சேவைகள் வரி குறைக்கப் பட்டது/விலக்களிக்கப்பட்டது.
* டிசம்பர் 2023 ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் அதிகனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் உள்ள வணிகர்களுக்கு, தாமதக் கட்டணம் மற்றும் வட்டி இல்லாமல் படிவம் ஜிஎஸ்டிஆர் 3-பி வரி விவர அறிக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 27.12.2023 வரை நீட்டிக்கப்பட்டது. அதேபோல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் விருதுநகரில் உள்ள வணிகர்களுக்கு, தாமதக் கட்டணம் மற்றும் வட்டியின்றி படிவம் ஜிஎஸ்டிஆர் 3-பி வரி விவர அறிக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 10.01.2024 வரை நீட்டிக்கப்பட்டது. மேலும், மேற்கண்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ள வணிகர்களுக்கு தாமதக் கட்டணம் இன்றி வருடாந்திர வரி விவர அறிக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 10.01.2024 வரை நீட்டிக்கப்பட்டது.
* புயல் மற்றும் வெள்ளம் பாதித்த மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகரில் உள்ள வணிகர்களுக்கு, தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரிச் சட்டம், 2006-இன்படி 2022-2023-ஆம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கை படிவத்தில் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 31.01.2024 வரை நீட்டிக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வையுடனும் தமிழ்நாடு எல்லா வகையிலும் ஏற்றம் பெற்றிட முனைப்புடனும், அர்ப்பணிப்புடனும் ஆற்றி வரும் பணி அளவிடற்கரியது. அந்த வகையில், வணிக வரித்துறையில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு புதிய திட்டங்களின் மூலம் இனிவரும் காலங்களில் அரசுக்கு கூடுதலாக கிடைக்கும் வருவாயினை உறுதி செய்யும் என கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

one × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi