சென்னை: ஜூலை 1ம் தேதி முதல் தட்கல் ரயில் டிக்கெட்டுகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்பெல்லாம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் ரயில் நிலையம் சென்று படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சி காரணமாக அவை அனைத்தும் தற்போது டிஜிட்டல் மயமாகிவிட்டன. ஆனால் டிக்கெட் முன்பதிவு செய்யக் கூடிய ஏஜென்சிகள் இடையூறு காரணமாக சாமானிய மக்களால் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடிவதில்லை என தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.
குறிப்பாக தட்கல் முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது சாதாரண மக்களுக்கு பெரும் சிக்கலாக இருக்கிறது. ரயில் டிக்கெட் தட்கல் டிக்கெட் பதிவு தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளையும் ஏஜெண்டுகளே முன்பதிவு செய்து விடுவதால் சாதாரண மக்களுக்கு டிக்கெட் கிடைப்பது கிடையாது. இந்த பிரச்சனையை போக்குவதற்காக ரயில்வே துறை அமைச்சகம் கூடிய விரைவில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் சரிபார்ப்பு கட்டாயம் என விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
2025 ஜூலை 1 முதல், IRCTC இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு ஆதார் உறுதிப்படுத்திய பயனர்களால் மட்டும் முன்பதிவு செய்யலாம். 2025 ஜூலை 15 முதல், ஆதாருடன் ஓடிபி (OTP) அடிப்படையிலான உறுதிப்பாடு கட்டாயமாகும்.
அதிகாரபூர்வ பிஆர்எஸ் (PRS) கவுன்டர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற முகவர்கள் பயனர் மொபைலுக்கு அனுப்பப்படும் ஓடிபி-யை உறுதிப்படுத்திய பின்பே தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு வழங்க முடியும். இது 2025 ஜூலை 15 முதல் நடைமுறைக்கு வரும்.
அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், தட்கல் பயணச்சீட்டுகளை அதன் திறப்பு நேரத்திலிருந்து முதல் 30 நிமிடங்களுக்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
குளிர்சாதன வகைகளுக்கு: காலை 10:00 மணி முதல் 10:30 மணி வரை.
சாதாரண வகைகளுக்கு: காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரை.
இந்த கட்டுப்பாடு தட்கல் சேவையின் பயன் பொதுமக்களுக்கு முழுமையாக சென்று சேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என இந்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.