மசூரி பருப்பு முருங்கைக் கீரை அடை
தேவையானவை
மசூரி பருப்பு – 250 கிராம்,
தோல் சீவிய இஞ்சி – 2 அங்குலம்,
பச்சை மிளகாய் -2,
நுணுக்கி நறுக்கிய முருங்கைக் கீரை – ஒரு கைப்பிடி,
மல்லித்தழை – கறிவேப்பிலை – சிறிதளவு,
சிறு சிறு துண்டுகளாக தேங்காய் – 4 ஸ்பூன் அளவு,
மிளகு – 1 டீஸ்பூன்,
வெண்ணெய் – 50 கிராம்,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை
முதலில் மசூரி பருப்பை நன்கு கழுவி 1 மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை நன்றாக ஊற வைக்க வேண்டும். பின்னர் நன்றாக ஊறிய பருப்பை ஒரு மிக்ஸியில் போட்டு இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அடை மாவு வரும் பதத்திற்கு ஏற்றபடி சிறிதுசிறிதாக தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த இந்த மாவில் நறுக்கிய கீரை, மல்லி, கறிவேப்பிலை, மிளகு, தேங்காய் துண்டு சேர்த்து நன்கு கலக்கி தோசைக்கல் சூடான பிறகு அதில் சிறிது வெண்ணெய் தடவி அடையா ஊற்றவும். பின்பு ஊற்றிய அடையில் இருபுறமும் நன்கு சிவந்து வெந்ததும் எடுத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சத்தான ருசியான மசூரி
பருப்பு முருங்கைக் கீரை அடை தயார். இந்த அடையை கீரை சேர்க்காமலும் செய்யலாம்.
கார்னி சால்சா
தேவையான பொருட்கள்
பேபி கார்ன் – தேவையான அளவு
கேரட் துருவியது – 1/4 கப்
குடமிளகாய் – 2 இன்ச் நீளத்தில்
நறுக்கிறது 1/4 கப்
கறுப்பு ஆலிவ்ஸ் – 1/2 கப்
வெள்ளை எள்- 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 10
ரீஃபைண்ட் ஆயில் – 4 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
புளித்த தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லித் தழை – 1/4 கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பேபி கார்னை நன்றாக வதக்கவும். நன்கு வதங்கியவுடன் துருவி வைத்திருக்கிற கேரட், குடமிளகாய், புளித்த தயிர் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இத்துடன் உப்பு, மிளகாய் தூள், நறுக்கிய கொத்தமல்லி, கறுப்பு ஆலிவ்ஸ், முந்திரி சேர்த்துக் கிளறி வெள்ளை எள் தூவி இறக்கினால் கார்னி சால்சா தயார்.
கார்ன் வெஜிடபிள் ரோல்
தேவையான பொருட்கள்
கான் பிளவர் மாவு – 2 கப்
உருளைக்கிழங்கு – 2
முட்டைக்கோஸ், பீன்ஸ்,
கேரட் – 1 கப் (நறுக்கியது)
பச்சைப் பட்டாணி – 1 கப்
கடுகு, உளுந்தம்பருப்பு,
உப்பு – தேவையான அளவு
மிளகுத் தூள் – சிறிதளவு
கரம் மசாலா – தேவையான அளவு
தக்காளி – 2
மஞ்சள் பொடி – சிறிதளவு.
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்துக் கொள்ளவேண்டும். பிறகு ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் பீன்ஸ், கேரட், பச்சை பட்டாணி போட்டு எண்ணெயில் வதக்க வேண்டும். வதங்கிய பிறகு தக்காளியை சேர்த்து வதக்கி, மஞ்சள்பொடி, கரம் மசாலா, மிளகுத்தூள், தேவையான உப்பு போட்டு நன்றாக வதக்கிய பின், மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து இறுதியாக கொத்தமல்லி போட்டு இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். கான் பிளவர் மாவுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி போல் பிசைந்து, செய்த மசாலாவை மாவிற்கு நடுவில் வைத்து பூரணம் போல் மடித்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான கான் வெஜிடபிள் ரோல் ரெடி.
மஞ்சள் கரிசாலை சட்னி
தேவையான பொருட்கள்
மஞ்சள் கரிசாலை
இலைகள் – 1/2 கிலோ
மிளகு -10
சின்ன வெங்காயம் -100 கிராம்
பூண்டு -25 கிராம்
இஞ்சி-தேவையான அளவு
செக்கு நல்லெண்ணெய் – 50 மிலி
தக்காளி -3
புளி- மிளகளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – கடுகு, கறிவேப்பிலை.
செய்முறை
முதலில் எடுத்து வைத்திருக்கிற கரிசாலை இலையை நன்றாக சுத்தம் செய்த பிறகு வாணலியில் போட்டு எண்ணெய் ஊற்றி வதக்க வேண்டும். அதன்பின் வெங்காயம், பூண்டு, மிளகாய் சேர்த்து வதக்கி பின்னர் தக்காளி, இஞ்சி, புளி சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும். பின் அனைத்தையும் ஒன்றாக்கி நன்றாக ஆறியபின் மைய அரைத்து எடுத்து தாளித்தால் கரிசாலை துவையல் தயார். குழம்பாக வேண்டும் என்றால் நீர் ஊற்றி கரைக்கலாம்.
பீட்ரூட் கீர்
சிறிய பீட்ரூட் ஒன்றை சுத்தமாக்கி, தோல் அகற்றி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் ஜூஸ் எடுத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை மூடி தேங்காய்ப் பால் கலந்து, சுவைக்கு வெல்லம் மற்றும் ஏலம், முந்திரி சேர்த்துக் கொள்ளலாம். வழக்கமாக குழந்தைகளுக்கு வழங்கும் கீருக்குப் பதிலாக இதைத் தரலாம்.