திண்டிவனம்: திண்டிவனம் மயிலம் ரோடு, செஞ்சி சாலை பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனர் ச.சு.ஜைனுதீன், வட்டாட்சியர் சிவாவை சந்தித்து மனு அளித்தார். அவர் அளித்த மனுவில் – திண்டிவனம் பகுதியில் மயிலம் மற்றும் செஞ்சி சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை அருகில் குடியிருப்பு மற்றும் அதிக அளவில் வணிக வளாகங்கள் உள்ளதாலும், பொதுமக்கள் வணிக வளாகத்திற்கு வரும் பொழுதும், குடியிருப்பு பகுதிகளிலும் மது பிரியர்கள் மது வாங்கிக் கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் சாலை ஓரங்களில் மது அருந்துவதும் மது பாட்டில்களை குடியிருப்பு பகுதி மற்றும் சாலை ஓரங்களில் உடைத்து செல்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் திண்டிவனம் நேரு வீதி பகுதியில் சாலை ஓரங்களில் தற்காலிகமாக உணவு பொருட்கள் கடை வைத்து நடத்தி வருபவர்கள், ஆயில் மாற்றாமலும், உணவுப் பொருட்களுக்கு மூடி போடாமலும் சுகாதாரமற்ற முறையில் தின்ப்பண்டங்களை விற்பதால் பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் அதனை வாங்கி சாப்பிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.