சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது முறையற்றது என என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். சென்னையில் திமுக சட்டத்துறைச் செயலாளரும், எம்.பி.யுமான என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; டாஸ்மாக் ஊழியர்கள் மீது பதியப்பட்ட 47 வழக்குகளில் பெரும்பாலான வழக்குகள், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தகுந்த விளக்கத்தை கொடுத்து வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு விட்டன. சில வழக்குகள் விடுதலையும் ஆகி இருக்கின்றன.
இதையெல்லாம் வைத்துக்கொண்டு டாஸ்மாக் நிறுவனத்திற்கு உள்ளேயே சென்று ED சோதனை செய்வது முறையற்றது. அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்றும் உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. அமலாக்கத்துறையின் நடவடிக்கை மாநில சுயாட்சிக்கு எதிரானவை என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் வசூல் கணக்கில் வரக் கூடிய மாறுபாடு தொடர்பாகத்தான் லஞ்ச ஒழிப்புத்துறை அவ்வப்போது வழக்கு பதிவு செய்யும்.
விற்பனை தொகையில் காணக்கூடிய மாறுபாடுகளை ஆதாரமாகக் கொண்டு நிறுவனத்திலேயே சோதனை செய்வது முறையற்றது. டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது முறையற்றது. அரசியல்வாதிகள் போல ரூ..1,000 கோடி முறைகேடு என அமலாக்கத்துறை கூறி வருகிறது. அரசியல் காரணங்களுக்காக சட்டத்தை அமலாக்கத்துறை துஷ்பிரயோகம் செய்தது. அரசியலமைப்பு சட்டங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் மீறி இருக்கிறார்கள். அமலாக்கத்துறை தனது வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளது என்பதை தலைமை நீதிபதி அழுத்தமாக கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் இருந்த 39 வழக்குகளை ஒன்றாக சேர்த்து அமலாக்கத்துறை சோதனை செய்தது. இந்தியா முழுமைக்குமான உத்தரவை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. முதல்முறையாக மாநில சுயாட்சிக்கு எதிராக ED அதிகாரிகள் செயல்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. அரசியல்ரீதியாக அமலாக்கத்துறை செயல்படுவதாக உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது என்று கூறினார்.