சென்னை : டாஸ்மாக்கில் காலி மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தில், டாஸ்மாக் கடைகளில் பணியாற்றுவோரை அமர்த்தாமல், தனியாக ஊழியர்களை நியமிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் தாக்கல் செய்த மனுவில், “டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியர்கள் தற்போது 12 மணி நேரம் வரை பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது. காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் பணிக்கு டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை நியமித்தால் பணிச்சுமை ஏற்படும்.
ஆகவே டாஸ்மாக் கடைகளில் பணியாற்றுவோரை அமர்த்தாமல், தனியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும். காலி பாட்டில்களை வைக்க தனி இடம், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், “இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தரப்பில், “டாஸ்மாக்கில் காலி மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மனுதாரர் சங்கம், அந்த குழுவை அணுகலாம்,”எனத் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி, இதுசம்பந்தமாக மனுத்தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 1 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.