மதுரை : அரசு ஏன் டாஸ்மாக்கை நடத்துகிறது? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. மதுரை கைத்தறி நகரில் டாஸ்மாக் கடை திறக்க தடை கோரி மேகலா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ” மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாது; கடைகள் படிப்படியாக மூடப்படும். மது குடிப்பதை அரசு ஊக்குவிப்பதில்லை,”என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “மது அருந்துவதை அரசு ஊக்குவிக்கவில்லை எனில் எதற்காக மதுவை விற்பனை செய்கிறீர்கள்?. மூடப்படும் டாஸ்மாக் கடைகள் மூடியவாறே இருக்கலாமே? ஏன் இன்னொரு இடத்திற்கு இடமாற்றம் செய்கிறீர்கள்?. எல்லாரும் மதுக்கடைகள் மூடப்படும் என சொன்னாலும் யாரும் செய்வதில்லை.
அரசு டாஸ்மாக் கடையை நடத்த வேண்டியதன் அவசியம் என்ன?அது அரசின் பணி இல்லையே?’அரசு எடுத்து நடத்துவதற்கு ஏராளமான தொழில் சார்ந்த நிறுவனங்கள் இருக்கையில் அரசு டாஸ்மாக் கடையை ஏன் நடத்த வேண்டும்?. ஒரு புறம் டாஸ்மாக்கை திறந்து, மறுபக்கம் போதை மறுவாழ்வு மையங்களை அரசு அமைக்கிறது. நம் வீட்டு பிள்ளைக்கு இதுபோல செய்வோமா? அரசின் கொள்கைகள் முரணாக உள்ளன. ஆன்லைன் ரம்மியை முறைப்படுத்திய அரசு, டாஸ்மாக் கடையில் வேறு நிலைப்பாடு கொண்டுள்ளது.
ரம்மி, மது இரண்டுமே கொலை செய்பவை. ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது என ஆன்லைன் ரம்மியை மாநில அரசுதடை செய்து வரைமுறைபடுத்தியது. டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்வதாலும் பொது சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. டாஸ்மாக் மதுபான கடை மற்றும் மனமகிழ் மன்றங்களை ஏன் அரசு தடை செய்யவில்லை?,”இவ்வாறு தெரிவித்தனர். இதையடுத்து, அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை.