பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சிமன்ற அலுவலகம் எதிரே குண்டும் குழிமான சாலையை சீர் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி தலைவர் கலாவதிக்கு கோரிக்கை வைத்தனர். பின்னர் இதுகுறித்து ஊராட்சி தலைவர் பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகரிடம் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று தார் சாலை அமைக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதன் மூலம் நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து காயத்ரி ஆவென்யூ வரை செல்லும் பாதையில் தார் சாலை பணிக்காக பூமி பூஜை நடைபெற்றது. அடிக்கல் நாட்டி ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி நாகராஜ் பணிகளை தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் சத்தியவாணி, வள்ளி விஸ்வநாதன், தினேஷ்குமார், ரியல் எஸ்டேட் மதன், புண்ணியகோட்டி, சகிலா, பழனி, சுப்லா, கலாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.