*தரமற்ற பேட்ஜ் ஒர்க்கால் அவதி
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் பெய்யும் பருவமழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் தார்சாலைகள் பெயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் கடந்த மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியது.
இந்த மாதம் துவக்கத்திலிருந்து பல நாட்கள் வெயிலின் தாக்கம் ஏற்பட்டது. இதற்கிடையே, கடந்த சிலநாட்களுக்கு முன்பு மீண்டும் தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியது.
இதனால், நகர் மற்றும் கிராமங்களில் ஆங்காங்கே தார் சாலைகள் பழுதடைந்து ஜல்லிகற்கள் பெயர்ந்து வர ஆரம்பித்துள்ளது. இதில், நகர் மட்டுமின்றி கிராமபுறங்களிலும் ரோடு பெயர்ந்த நிலையில் ஜல்லி பெயர்ந்து பறந்து கிடக்கிறது.
குறிப்பாக, நகரில் ராஜாமில்ரோடு, பஸ் நிலையம் செல்லும் பகுதி குண்டும், குழியுமாக ரோடு பழுதாகியுள்ளது பயணிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் உடுமலை ரோடு, கோவை ரோடு சிடிசி மேட்டிலிருந்து சக்திமில் வரையிலும் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் ஆங்காங்கே தார் சாலை பெயர்ந்திருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
இதில், உடுமலை ரோடு மரப்பேட்டை-ஊஞ்சவேலாம்பட்டி வரை சுமார் 3.5 கிமீ தூரத்துக்கு சில வாரத்துக்கு முன்பு வரை ஆங்காங்கே தார் சாலை பெயர்ந்த நிலையில் பள்ளமானது.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் புகாரால், சிலநாட்களுக்கு முன்பு அப்பகுதியில் பேட்ஜ் ஒர்க் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த பணி தரம் இல்லாமல்போனதாக கூறப்படுகிறது. இதனால், பல இடங்களில் ஜல்லிபெயர்ந்து ரோட்டில் கிதறி கிடக்கிறது.
அந்த கற்கள் வாகனங்களின் டயர்களை பதம்பார்கிறது. அதிலும் கடந்த சில நாட்களாக பகல், இரவு என அடிக்கடி மழையால், உடுமலை ரோட்டில் மீண்டும், குண்டும் குழியுமாகியுள்ளது.
இதனால், மழைநீர் தேங்கியிருக்கும்போது பள்ளம் எது என தெரியாமல் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
தரமின்றி மேற்கொள்ளப்படும் தார் சாலை பணியால் பொதுமக்கள் வேதனையடைகின்றனர். எனவே, சாலைகளை முழுமையாக சீர்படுத்தும்போதோ அல்லது பேட்ஜ் ஒர்க் மேற்கொள்ளும்போதோ, தரத்துடன் மேற்கொள்ள வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.