நாகர்கோவில்: நாகர்கோவில் ஒழுகினசேரி பாலத்தில் டேங்கர் லாரி திடீரென பழுதாகி நின்றதால், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாகர்கோவில் மாநகரின் நுழைவு வாயில் பகுதியான ஒழுகினசேரி ஆற்றுப்பாலம் அருகே நேற்று மதியம் 3 மணியளவில் திடீரென பெட்ரோல் டேங்கர் லாரி பிரேக் டவுன் ஆனது. இதனால் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் ஏராளமான வாகனங்கள் குவிந்தன. நேரம் செல்ல, செல்ல நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றன. ஆம்புலன்சுகளும் செல்ல முடியாத நிலை இருந்தது.
சம்பவம் பற்றி அறிந்ததும் டிராபிக் போலீசார், வடசேரி போலீசார் வந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி, வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பினர். திருநெல்வேலி செல்லக்கூடிய பஸ்கள், வாகனங்கள் புத்தேரி வழியாக திருப்பி விடப்பட்டன. மெக்கானிக் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு டேங்கர் லாரியை ரோட்டோரமாக தள்ளி ஒதுக்கினர். காலி டேங்கர் லாரி என்பதால், தள்ள முடிந்தது. அதன் பின்னர் வாகன போக்குவரத்து தொடங்கியது. இதனால் சுமார் 2 மணி நேரம் நெரிசல் ஏற்பட்டது. இதே போல் நாகர்கோவில் பார்வதிபுரம் பாலத்தில் தற்போது சாலை பணி நடக்கிறது.
நேற்றும் பாலத்தில் சாலை போடும் பணி நடந்தது. இதனால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அனைத்து வாகனங்களும் பாலத்தின் கீழ் பகுதி வழியாக அனுமதிக்கப்பட்டன. இதனால் பார்வதிபுரம் சந்திப்பிலும் வாகனங்கள் திணறின. நாகர்கோவில் மணிமேடை சந்திப்பு பகுதியிலும் நேற்று காலையில் சாலை பணிகள் நடந்ததால் நெரிசல் ஏற்பட்டது.