தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து தினந்தோறும் டேங்கர் லாரிகளில் விமானங்களுக்கான பெட்ரோல் எடுத்துச்செல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த 5 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி வழங்கப்பட்டு வந்த வாடகை தற்போது குறைத்து வழங்கப்படுவதாகவும், இதை உயர்த்தி வழங்கவேண்டும் எனவும் டேங்கர் லாரி உரிமையாளர்கள், பாரத் பெட்ரோலியம் நிறுவன நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். வாடகையை நிர்வாகம் உயர்த்தி வழங்கவில்லை. இதனால் தண்டையார்பேட்டை பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் இருந்து விமான நிலையத்திற்கு கொண்டு செல்லும் பெட்ரோல் டேங்கர் லாரிகளின் உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மூர்த்தி, வேலு, சுந்தரம், பரணி ஆகியோர் கூட்டாக கூறுகையில், ‘பாரத் பெட்ரோலிய நிறுவனத்திடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சுமுக தீர்வு எட்டினால் விமான நிலையத்திற்கு பெட்ரோல் எடுத்துச்செல்வது தொடரும். இல்லையென்றால் விமானத்திற்கு பெட்ரோல் பற்றாக்குறை ஏற்படும். மேலும் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் இருந்து பங்க்குகளுக்கு பெட்ரோல் கொண்டு செல்லும் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக்கூடும். கடந்த 3 நாட்களாக மீஞ்சூர் அத்திப்பட்டு பகுதியில் இயங்கி வரும் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் இருந்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், பர்ணஸ் ஆயில் கொண்டு செல்லும் டேங்கர் லாரிகள் வாடகை குறைப்பு காரணமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதனடிப்படையில் இன்று முதல் தண்டையார்பேட்டை பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் இருந்து விமானங்களுக்கு கொண்டு செல்லும் பெட்ரோல் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றால் இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய அனைத்து லாரி சங்கங்களும் ஒன்று கூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்’ என்றனர். டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.