ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த பாப்பாநாடு தெற்கு கோட்டையை சேர்ந்தவர் கவிதாசன் (25). இவர் தஞ்சையில் ஒரு கிராமத்தை சேர்ந்த பட்டதாரியான 22 வயது பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அந்த இளம்பெண் விடுமுறையில் கடந்த 3 நாட்களுக்கு முன் ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் இளம்பெண்ணை சந்தித்த காதலன், தனியாக பேச வேண்டும் என கூறி, பெண்ணின் வீட்டின் எதிரே ஆள் நடமாட்டம் இல்லாத கொட்டகை பகுதிக்கு வரவழைத்தார். அங்கு சென்ற இளம்பெண்ணை அவரது நண்பர்களான பாப்பாநாட்டை சேர்ந்த திவாகர் (27), பிரவீன் (20) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து பீர் பாட்டில் மற்றும் கத்தியை காட்டி மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்தனர்.
அதை அவர்களில் ஒருவர் செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார். இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண், ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில், 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கவிதாசன், திவாகர், பிரவீன் மற்றும் சிறுவனை நேற்று கைது செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக எஸ்.பி., ஆசிஷ் ராவத், ஒரத்தநாடு ஏஎஸ்பி சகுனாஸ் ஆகியோர் இளம்பெண்ணிடம் நேரில் சென்று விசாரணை நடத்தினர். கைதான 4 பேரையும் ஒரத்தநாடு நீதிமன்றத்தில் இன்று போலீசார் ஆஜர்படுத்துகின்றனர்.