நெல்லை: தாமிரபரணி, கல்லணையில் மூழ்கி பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர், தந்தை, மகள் பரிதாபமாக இறந்தனர். நெல்லை பாளையங்கோட்டை அருகே கொங்கந்தான்பாறை காமராஜ் நகரைச் சேர்ந்த ரமேஷ் மகன் ஆண்ட்ரூஸ் (17), பாளை. ஜோதிபுரத்தைச் சேர்ந்த ஜோசப் மகன் அருண்குமார் (17), டக்கரம்மாள்புரத்தைச் சேர்ந்த வில்லியம் மகன் நிக்கேல் (17). மூவரும் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர்.
இவர்களுடன் படிக்கும் முன்னீர்பள்ளம் அடுத்த வடுகப்பட்டியை சேர்ந்த துரையின் புதுமனை புகுவிழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற ஆண்ட்ரூஸ், அருண்குமார், நிக்கேல், சார்லஸ் உட்பட 6 பேர் பெற்றோருக்கு தெரியாமல் வடுகப்பட்டி அருகே தாமிரபரணி வெள்ள நீர் கால்வாய்க்கு சென்று குளித்தனர். அப்போது 18 அடி ஆழமுள்ள மைய பகுதிக்கு சென்ற ஆண்ட்ரூஸ், அருண்குமார், நிக்கேல் ஆகியோர் நீரில் மூழ்கி தவித்தனர். மற்ற 3 பேரால் அவர்களை மீட்க முடியவில்லை.
தகவலறிந்து பேட்டை தீயணைப்பு வீரர்கள் வந்து ஒரு மணி நேரம் போராடி மூவரது உடல்களையும் மீட்டனர். சடலங்களை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறினர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி: திருச்சி திருவெறும்பூர் அருகே பத்தாளப்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (40). பெல் ஊழியர். இவருக்கு கிருத்திகா (13), யாஷிகா (6) என்ற இரு மகள்கள். கிருத்திகா 7ம் வகுப்பும், யாஷிகா 2ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று திருமண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய சுரேஷ், மதியம் 2 மகள்களையும் அழைத்து கொண்டு பத்தாளபேட்டையில் உள்ள கல்லணை கால்வாயில் குளிக்க சென்றார்.
கிருத்திகா மட்டும் கரையில் இருந்தார். யாஷிகா குளிப்பதற்காக படிக்கட்டில் இருந்து இறங்கியபோது நீரில் அடித்து செல்லப்பட்டார். மகளை காப்பாற்றுவதற்காக நீரில் குதித்த சுரேசும் அடித்து செல்லப்பட்டார். கிருத்திகாவின் அலறலை கேட்டு அப்பகுதியினர் யாஷிகாவை மீட்டு பெல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் யாஷிகா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கல்லணை காவிரியில் இருந்து கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீர் அளவு அதிகமாக உள்ளதால் சுரேஷ் உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.