சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசின், பல்வேறு துறைகளில் வேலையை பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வி தகுதி வரை, தமிழ் மொழி வழியில் படித்தவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த ஒதுக்கீடு, தமிழ் வழியில் படிக்க வேண்டும் என்ற உணர்வை அதிகரிக்கும். வேறு மாநிலத்தவர் தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பை பெறுவதையும் தடுக்க உதவும். எனவே, இந்த ஒதுக்கீடு வரவேற்புக்குரியது. மருத்துவப் பணியாளர் பணிநியமன ஆணையம் (எம்.ஆர்.பி) சில பணிகளில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிட நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளது. இவை பாராட்டத்தக்கது. அதே போன்று, மருத்துவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீடு, அரசு மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்பில் வழங்கிட வேண்டும். மருத்துவக் கல்வி, எம்பிபிஎஸ் தமிழ் வழியில் இல்லாத நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மருத்துவர்களுக்கு, 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும். அதற்கு தகுந்த நடவடிக்கைகளை, தமிழ்நாடு அரசு எடுத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.