Thursday, November 30, 2023
Home » இஸ்ரேலில் சிக்கியிருந்த 110 தமிழர்கள் பத்திரமாக மீட்பு: அமைச்சர் பேட்டி

இஸ்ரேலில் சிக்கியிருந்த 110 தமிழர்கள் பத்திரமாக மீட்பு: அமைச்சர் பேட்டி

by Ranjith

சென்னை: இஸ்ரேல் நாட்டிலிருந்து தங்களை மீட்க வேண்டும் என்று 128 பேர் முன்பதிவு செய்திருந்தனர். அதில், 110 பேர் பத்திரமாக தமிழ்நாடு வந்துவிட்டனர் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக ஆபரேஷன் அஜய் என்கிறத திட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ளது. சிறப்பு விமானங்கள் மூலம் அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை, தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுடன் இணைந்து மீட்டுக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதோடு இஸ்ரேலில் இருக்கும் தமிழர்கள் இந்தியா திரும்ப விருப்பப்பட்டால், அவர்கள் தமிழ்நாடு அரசுடன் தொடர்பு கொள்வதற்கு தனி செல்போன் எண்கள், இணையதள முகவரி ஆகியவற்றையும் வெளியிட்டிருந்தது. அதில் இதுவரை 128 பேர் பதிவு செய்திருந்தனர். ஒன்றிய அரசின் ஆபரேஷன் அஜய் திட்டம் மூலம் இதுவரை 110 தமிழர்கள் இஸ்ரேலில் இருந்து பாதுகாப்பாக திரும்பி வந்துள்ளனர். நேற்று இஸ்ரேலில் இருந்து வந்த ஆபரேஷன் அஜய் மீட்பு விமானங்களில் வந்த 49 தமிழர்களில், 9 பேர் கோவைக்கும், 8 பேர் மதுரைக்கும், 32 பேர் சென்னைக்கும், 3 பயணிகள் விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று 3 டெல்லி விமானங்களில் வந்த 32 தமிழர்களையும், தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர். இந்த 32 பேர்களும் சென்னை, சேலம், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாகைப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள். அவர்களை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விமான நிலையத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ‘‘இதுவரை 128 பேர் இஸ்ரேலில் இருந்து, தமிழகம் திரும்ப விருப்பம் தெரிவித்து பதிவு செய்திருந்தனர். அவர்களில் 110 பேர் நேற்று வரை வந்து விட்டனர். இன்னும் 18 பேர் மட்டுமே வர வேண்டும். ஆனால் புதிதாக மேலும் சிலர் பதிவு செய்வார்கள் என தெரிய வருகிறது. எவ்வளவு பேர் பதிவு செய்தாலும், அத்தனை பேரும் பாதுகாப்பாக அழைத்து வரப்படுவார்கள்’’ என்றார்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?