சென்னை: தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கேட்பதில் சில சிக்கல்கள் உள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலஜே சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபேயில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர்தான் காரணம் என்று ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபா கரந்தலஜே சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஷோபா மன்னிப்பு கோரினால் ஏற்க தயாராக இருப்பதாக நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஷோபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோருவதில் சில சிக்கல்கள் உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே எக்ஸ் தளத்தில் மன்னிப்பு கேட்கப்பட்டு விட்டது என்றார். அதற்கு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், முதலமைச்சரின் கருத்தை பெற்றே, செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவித்ததாக கூறினார். அமைச்சர் ஷோபா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி, எங்கள் தரப்பு வாதங்களை முன் வைக்க அனுமதி தரவேண்டும் என்றார். இதையடுத்து, விசாரணையை வரும் 23ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.