சென்னை: தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாகரிகமற்றவர் என்பதன் மூலம் 8 கோடி தமிழர்களை தர்மேந்திரபிரதான் அவமதித்துள்ளார் என விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்டஅறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை நாகரிகமற்றவர்கள் என்று கூறியதன் மூலம் 8 கோடி தமிழ் மக்களை ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் அவமதித்துள்ளார். இதற்கு அவர் உடனடியாக தமிழ்நாட்டு மக்களிடம் தனது மன்னிப்பை பகிரங்கமாக்க கோர வேண்டும். அவரது கூற்று ஆணவத்தின் உச்ச வெளிப்பாடாகும்.
தர்மேந்திரபிரதான் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாகரிகமற்றவர்கள் என்று தனது தடித்த நாக்கின் மூலம் அநாகரிகமாகப் பேசியுள்ளார். உலகத்தில் 3300 ஆண்டுகளுக்கு முந்தைய மொழி தமிழ். நாகரீக, பண்பாட்டிற்கு சொந்தக்காரர்களான தமிழர்களை நாகரிகமற்றவர்கள் என்று பேசுவது அநாகரிகத்தின் உச்சமாகும். பாரம்பரியமிக்க தமிழ் மக்களை அவமதிக்கும் வகையில் நாடாளுமன்ற அவையில் பேசியிருப்பது வன்மையானக் கண்டனத்துக்குரியது. உடனடியாக மோடி இதற்கான வருத்தத்தைத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு பொன்குமார் கூறியுள்ளார்.