சென்னை : தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலஜே மன்னிப்பு கோரினார். தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டு மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்புக்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர் காரணம் என ஷோபா கரந்தலஜே கூறியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபேவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் காரணம் ஒன்றிய இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மதுரையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் அமைச்சர் ஷோபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
கடந்த முறை இந்த மனு விசாரணைக்கு வந்தபோது பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் ஷோபா ஒரு பிராமண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மன்னிப்பு கோருவதாக அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் “எந்த உள்நோக்கத்துடனும், தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் கருத்து தெரிவிக்கவில்லை. தனது கருத்து தமிழர்களை புண்படுத்தியதை புரிந்து கொண்டு சமூக வலைதளங்களில் மன்னிப்பு கோரினேன். தமிழர்களின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பண்பாடு மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். தனது கருத்து யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்பு கோருகிறேன்” என தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை செப்.05ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.